பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1000 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

செடியில் ஒரு கொழுந்தைக் கிள்ளி விட்டாலும் செடி முழுவதும் மணம் இருந்துகொண்டுதான் இருக்கிறது! மல்லிகையிலோ, அந்த மலரில் தோன்றிய எல்லாம், ஏன்? அந்த மலரே அதோடு அழிந்து போய்விடுகிறது. பெற்றோர் முன்பின் அறியாத ஆண் பெண் உள்ளங்களில் திருமணம் என்ற பெயரால் உண்டாக்கிவிடும் காதல், மருக்கொழுந்துச் செடியைப்போலவே சிதைவுகளுக்குப் பின்னும் நிலைத்த மணத்துடனே தழைத்து வளருகிறது. இளம் நெஞ்சங்கள் தாமாக அடையும் காதல் கவர்ச்சியுடனே விரைவாக வளர்வதுபோலவே விரைவாக அழிந்தும் போய்விடுகிறது. மல்லிகையைப் போலத் தோன்றிமறையும் காதலில் தொடக்க இன்பம் பெரிதாயினும் மருக்கொழுந்துபோல நிலைத்த மணம் இரண்டாவது வகைக் காதலில் மட்டும் தான் இருக்கிறது”.

இந்தப் பேருண்மையை அவள் பிரிவுக்குப்பின்னால்தான் புரொபஸர் ரங்கநாதன் உணர்ந்துகொள்ள முடிந்தது! தகப்பனார் என்ன நோக்கத்தோடு அன்று அவனுடைய காதல் மணத்தை எதிர்த்தாரோ அதை அவன் அறிய மாட்டான். ஆனால், அந்த எதிர்ப்பில் மேற்கண்டமல்லிகைக்கும் மருக்கொழுந்திற்கும் இடையே உள்ள தத்துவ உண்மையும் ஏதோ ஒரு கோடியில் கலந்திருக்க வேண்டும் என்று அவன் அறிந்துவிட்டான் இப்போது!

5

என்ன ஸார், மணி பத்தாயிற்று! இன்னும் நீங்கள் காலேஜுக்குப் புறப்படத் தயாராகவில்லையா?.... அடேடே இதென்ன? ஈர வேஷ்டியோடு நாற்காலியில் உட்கார்ந்து யோசனை? நன்றாயிருக்கிறது நீர் லெக்சருக்கு நோட்ஸ் எடுக்கிற லட்சணம்’ உள்ளே வந்து இப்படிக் கூறிக் கொண்டே, தன் எதிரே உடன் வேலை பார்க்கும் சமஸ்கிருத புரொபஸர் சாம்பசிவ சர்மா நிற்பதைக் கண்டதும், ரங்கநாதன் சிந்தனையை விட்டு மீண்டும் இந்த உலகிற்கு வந்து சேர்ந்தான்.

சமயலறையில் அடுப்பு இதற்குள் அணைந்துபோயிருந்தது. போகும்போது ஹோட்டலில் சாப்பிட்டுக்கொள்வதைத் தவிர இன்றைக்கு வேறு வழியில்லை என்றெண்ணியவாறே விரைவாக டிரெஸ் செய்துகொண்டு சர்மாவுடன் புறப்பட்டான் ரங்கநாதன். ஜானகி அவனை விட்டு உதிர்ந்த மல்லிகைபோலப் பிரிந்து சென்றுவிட்டாலும் காலையில் கொள்ளிடக் கரையிலும், வேறு சில சமயங்களிலும் அவனை நினைவு வடிவாகப் பற்றிக் கொண்டு வருத்தி வருகிறாள்.

அவள் தன் லெக்சரர் வேலையில் கசப்பு ஏற்பட்டு அடுத்தபடியாகரங்கநாதனைத் தேடிவருகின்றபோதாவது, அவர்கள் வாழ்க்கை மருக்கொழுந்தாக இருக்கவேண்டும். மீண்டும் மலர்ந்து உதிர்ந்து வாடும் மல்லிகையாகுமானால் அவள் வரவை எதிர்பார்த்து ரங்கநாதன் இனிமேல் ஆசையுறவே மாட்டான்.

(1978-க்கு முன்)