பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1002 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்


“சரி சார், பார்க்கிறேன். ஆசிரியர் அறையிலிருந்து வெளியே வந்தார் உதவியாசிரியர் ராமசாமி.

2

தின்மூன்றாம் தேதி காலை பத்தரை மணிக்குத் தென்காசி ஸ்டேஷனில் வந்து இறங்கினார் வேங்கடரத்தினம். பன்னீர் தெளிப்பதுபோலச் சாரல் பெய்து கொண்டிருந்தது. குளிர்ந்த தென்றல் காற்று அவருடைய சில்க் ஜிப்பாவை வருடிக் கொண்டு வீசியது.

ஆஹா இப்படிப்பட்ட சூழ்நிலையிருந்தால் கற்பனை எவ்வளவு ‘மனோரம்மியமாக ஒடும்? என்று தமக்குள் எண்ணிக் கொண்டார் அவர். தென்புறம் குற்றாலத்தின் மேக மூட்டத்துடன் கூடிய நீலநிற மலைச்சிகரங்கள் அவரை மெளனமாகச் சைகைசெய்து அழைப்பது போல விளங்கின. வாடகைக் கார் ஒன்றில் ஏறிக் குற்றாலத்திற்குப் புறப்பட்டார் அவர்.

'குற்றாலத்தில் தங்கியிருக்கும் அந்தப் பதினைந்து நாட்களில் எவ்வளவு எழுத முடியுமோ அவ்வளவையும் எழுதிக் குவித்துவிடவேண்டும் என்று சங்கல்பம் செய்துகொண்டிருந்தது அவருடைய உள்ளம். டாக்ஸி சென்ற வேகத்தோடு வேகமாகச் சூழ இருந்த இயற்கைக் காட்சிகளை ரஸித்தார் அவர்.

தனிமையும், எழுதுவதற்கு வசதியும் வேண்டுமென்று வாடகை அதிகமாக இருப்பதையும் பொருட்படுத்தாமல் ஐந்தருவிரோட்டில் ஒரு பங்களாவின் மாடியில் தங்கினார் வேங்கடரத்தினம்.ரோட்டின் தெற்குப் புறத்தில் சித்தர் அருவிக்குப் போகிற மலைவழியின் சரிவில், அழகான பெரிய தோட்டத்திற்கும் பூஞ் செடிகளுக்கும் நடுவே வெய்யிலே எட்டிப் பார்க்க முடியாத பசுமைக்குள் மறைந்திருந்தது அந்தப் பங்களா! தம் எழுத்துக்கும் கற்பனைக்கும் சிந்தனைக்கும் பொருத்தமான இடம் கிடைத்ததே என்று திருப்திகொண்டார் வேங்கடரத்தினம் கூப்பிட்ட நேரத்திற்கு என்ன என்று கேட்டு அவர் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு அந்தப் பங்களாவின் வாட்ச்மேன் இருந்தான். விஷயம் வேறொன்றுமில்லை எழுதத் தொடங்கிவிட்டால் அடிக்கடி காப்பியை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தால்தான் கற்பனை தடையின்றி ஒடும் அவருக்கு. ஹோட்டலில் இருந்து காப்பி வாங்கிக்கொண்டு வரத்தான் 'வாட்ச்மேனின் உதவி அவருக்கு அடிக்கடி தேவையாயிருந்தது.

வந்த அன்றைக்கு அலுப்பாக இருந்ததனால் மலைமேலிருக்கும் தேனருவி, சண்பக அருவி, முதலிய இடங்களுக்கு அவரால் போக முடியவில்லை. காலையில் வடவருவியில் நீராடி விட்டுப் பங்களாவிற்கு வந்தவர், வாட்ச்மேன் கொண்டு வந்து வைத்திருந்த எடுப்புச் சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு அலுப்புத் தீர உறங்கினார். மறுபடி அவர் கண் விழித்தபோது மணி நாலரை ஆகியிருந்தது. “அடடா! இவ்வளவு நேரம் உறங்கிக் கழித்துவிட்டோமே? இரவு நேரத்தில் தூக்கம் விழித்தால்தான் தொடர் கதையின் முதல் அத்தியாயத்தையாவது எழுதலாம்” என்றெண்ணிக் கொண்டே வாட்ச்மேனைக் கூப்பிடுவதற்காக வாயைத் திறந்தார்.