பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி ஆனால்...? * 1003


அதற்குள் அவனே உள்ளே துழைந்து ஒரு 'விஸிட்டிங்' கார்டை அவரிடம் கொடுத்தான். தாம் வந்திருப்பதே யாருக்கும் தெரிந்திருக்காது தெரியாமலிருப்பது தான் தம்முடைய வேலைக்கு நல்லது” என்றெண்ணிக் கொண்டிருந்த வேங்கடரத்தினம் விஸிட்டிங் கார்டைப் பார்த்ததும் திகைத்தார். 'முல்லை மலர்' தொடங்கிய நாளிலிருந்து அதன் சந்தாதாரராக இருக்கும் தென்காசிவக்கீல் ஒருவரின் பெயர் விஸிட்டிங் கார்டில் இருந்தது. வேங்கடரத்னம் சம்மதத்துக்கு அறிகுறியாகத் தலையை அசைத்தார். வாட்ச்மேன் வக்கீலை அழைத்து வந்தான்.

சந்திப்பு, முறையான குசலப்ரச்னம் எல்லாம் முடிந்த பின் வக்கீல், வேங்கடரத்னத்தை இரவு தென்காசி வந்து தம் வீட்டில் சாப்பிடவேண்டும் என்று ஆர்வத்தோடு வற்புறுத்தினார்.

“வக்கீல் சார்! உங்கள் அன்புக்கு நன்றி. இப்பொழுதே மணி நாலே முக்கால் ஆகிவிட்டது. நான் நேரே ஐந்தருவிக்குப் போய்க் குளித்துவிட்டு இங்கே வந்து கொஞ்சம் எழுதவேண்டும். முக்கியமான எழுத்து வேலை.” என்று மறுத்தார் வேங்கடரத்தினம்.

வக்கீல் அவரை விடவில்லை!

“அதனால் பரவாயில்லை. கீழே என் கார் இருக்கிறது. அதிலேயே ஐந்தருவிக்குப் போவோம். நானும் கூட வருகிறேன். குளித்துவிட்டு நேரே தென்காசிக்குப் போய் விடலாம், இரவு என் காரிலேயே கொண்டு வந்து விடுகிறேன். பின்பு நீங்கள் எழுதலாமே?” என்றார். வேங்கடரத்தினம் சம்மதித்தார். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தன. ஆனால், இரவு குற்றாலம் திரும்பும் திட்டம் மட்டும் நிறைவேறவில்லை. தென்காசியிலேயே தங்கும்படி நேர்ந்துவிட்டது. வேங்கடரத்தினத்தை மறுநாள் காலையில்தான் குற்றாலத்தில் கொண்டு வந்து விட்டார் வக்கீல்.

“நீங்கள், நான் வந்திருப்பதை வேறு யாரிடமும் சொல்லிவிட வேண்டாம். உங்களோடு இருக்கட்டும்.நான் ஒரு தொடர்கதை எழுதிக்கொண்டுபோகலாமென்று இங்கே வந்தேன்.பலர் என்னைக் காண வந்தால் என் வேலைக்கு இடையூறு விளையும்" என்று கூறி வக்கீலை விடைகொடுத்து அனுப்பினார் வேங்கடரத்தினம்.

வக்கீல் சென்றபின் காப்பி வரவழைத்து அருந்திவிட்டு எழுதுவதற்கு உட்கார்ந்தார்.அப்போது காலை மணி எட்டே கால்.கதையை எங்கே ஆரம்பிக்கலாம்? எந்தச் சம்பவத்திலிருந்து ஆரம்பித்து எப்படி வளர்க்கலாம் என்ற சிந்தனையிலேயே ஒன்பதரை மணி வரை கழிந்துவிட்டது. அதற்கு மேல் எழுத்து ஒடவில்லை. கதையின் தலைப்புக்கூட இன்னும் எழுதியாகவில்லை.

“சரி சாயங்காலம் பார்க்கலாம்! இப்போது ஏதாவது ஒர் அருவிக்குப் போய்க் குளித்துவிட்டு வருவோம்” என்றெண்ணிக்கொண்டு வேலைக்காரனை அழைத்தார். அவன் சண்பக அருவிக்குப் போகலாம் என்றான். வேங்கடரத்னம் அவனைத் துணைக்கு அழைத்துகொண்டு மலைமேல் சண்பக அருவிக்குப் போகும் சாலையில் ஏறினார். பாதித் தொலைவு நடந்தவர் திடீரென்று ஏதோ நினைவு வந்தவர் போல் "ஏனப்பா இங்கே தபாலாபீஸ் எங்கே இருக்கிறது? வா. அவசரமாக ஒரு தந்தி