பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



1004

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்


கொடுக்க வேண்டும். கொடுத்துவிட்டு அப்புறம் மேலே ஏறுவோம்!” என்று வாட்ச்மேனைப் பார்த்துக் கேட்டார்.

“பக்கத்திலே தானுங்க! அடிவாரத்திலேயே இருக்குது” என்று அவரைத் தபாலாபீஸ்"க்கு அழைத்துச் சென்றான் அவன்.

புதிய தொடர் கதையின் பெயர் "நிலா மோகினி” என்று குறிப்பிட்டு, உதவியாசிரியர் ராமசாமிக்குச் சுருக்கமாக ஒரு தந்தியையே கொடுத்தார் வேங்கடரத்னம். திடீரென்று கீழே இறங்கியதையும் பரக்கப் பரக்கத் தந்தி கொடுத்ததையும் பார்த்து வேலைக்காரன் என்னவோ ஏதோ என்று தனக்குள் நினைத்துக்கொண்டான். தந்தி கொடுத்து முடிந்ததும் மீண்டும் மலைமேல் ஏறினர் இருவரும். வாட்ச்மேன் மெளனமாக அவருக்கு வழியைக் காட்டிக் கொண்டே மேலே ஏறிச் சென்றான்.

அடிக்கடி அவன் மெளனத்தைக் கலைத்து வாயைக் கிண்டினார் வேங்கடரத்னம்

“என்னப்பா வாட்ச்மேன்! இந்த மலையைப் பற்றிய விசேஷமான சமாசாரங்கள், ஆச்சரியமான நிகழ்ச்சிகள், ஏதாவது இருந்தால் சொல்லேன்” தம் கதைக்குப் பொருள் தேடவே இப்படிக் கேட்டார் அவர்.

அதுதான் ‘சாக்கு’ என்று, அவன் வேண்டியது வேண்டாதது என்று பாராமல் பச்சிலை மூலிகையிலிருந்து பலா மரங்களின் காய்ப்பு வரை எதை எதையோ விவரித்துக் கூறத் தொடங்கிவிட்டான்.வேங்கடரத்னத்திற்கு ஏனடா இவன் வாயைக் கிளறினோம்? என்றாகிவிட்டது.

‘மணிபர்ஸ் காலியாகிவிட்டது! அதில் ஒன்றுமிருக்காது’ என்ற அவநம்பிக்கை யோடு கைவிட்டு வேண்டா வெறுப்பாகத் துழாவினவனுக்கு, அதிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டே அகப்பட்டது போல கதைக்குதவாத செய்திகளை அதுவரை பேசி வந்த வாட்ச்மேன் அப்போது தான் ஒரு விறுவிறுப்பான நிகழ்ச்சியைத் தொடங்கினான். வேங்கடரத்னம் கவனத்தோடு கேட்கலானார்.

3

போன வருடம் தேனருவிக்குப் போகிற பாதையில் இரண்டு பேர் அதாவது ஒர் இளம் தம்பதி தற்கொலை செய்து கொண்டதாகப் பேப்பரில் ஒரு சமாசாரம் வந்தது பாருங்கள்.”

"ஆமாம்! அதற்கென்ன” - வேங்கடரத்னம் கேட்டார். “அது நடந்த இடம் இதுதானுங்க" இப்படிக் கூறிக்கொண்டே கிடுகிடு பாதாளமான ஒரு பள்ளத்தைச் சுட்டிக் காட்டினான் வாட்ச்மேன்.

இடப்பக்கம் திரும்பி அந்த இடத்தைப் பார்த்தார் அவர். தலை சுற்றுவது போலிருந்தது.அவ்வளவு பெரிய பள்ளம். மேலேயிருந்து அசாத்தியமான வேகத்தோடு பாய்ந்துவரும் சித்திரா நதியின் பிரவாகம் மூன்று பெரிய அருவிகளாகப் பிரிந்து அந்தப் பள்ளத்திற்குள் வீழ்ந்து கீழே சென்று கொண்டிருந்தது. இயற்கையழகிலும் காணும் கண்களைப் பிரமிக்கவைக்கும் ஒருவிதப் பயங்கரத் தோற்றம் கலந்திருக்க