பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி ஆனால்...?

1007


மேஜைமேல் எழுதிப் பின் செய்து வைத்திருந்த தொடர்கதையின் இரண்டு அத்தியாயங்களையும், அதனருகே வைத்திருந்த விலையுயர்ந்த அவரது பார்க்கர் பேனாவையும் அங்கே காணோம்.

வேங்கடரத்னம் மலங்க மலங்க விழித்தார். பயப்பிரமை படிந்த விழிகளால் பால்கனியில் நின்றுகொண்டே சுற்று முற்றும் பார்த்தார். நேர் எதிரே ரோஜாச் செடிகளின் பக்கம் திரும்பியபோது மயிர்க்கூச்செறியும்படியான ஒரு காட்சியை அவர் கண்டார். அவருக்கு உடலில் ரத்தம் உறைந்துவிட்டது. கால்கள் அசைய மறுத்தன. கூச்சல் போட வாய் எழவில்லை!

"மோகினிப் பிசாசு" - அவருடைய செவிகளுக்குக்கூடக் கேட்காத அவ்வளவு மெல்லிய குரலில் உதடசையாமல் முனு முனுத்தது அவருடைய நா.

ரோஜாச் செடிகளின் நடுவே இருந்த சிமெண்ட் மேடையில் அப்ஸர லோகத்து அழகுகளையும் மிஞ்சி நிற்கும் அழகோடு ஒரு பெண் வீற்றிருந்தாள். அவள் கையில் அவர் எழுதி வைத்திருந்த பேப்பர் கற்றைகளும், பார்க்கர் பேனாவும் இருந்தன.

'சந்தேகமில்லை! இவள் மோகினியேதான். இல்லையானால் இவள் அழகில் இவ்வளவு மயக்கும் சக்தியும் கவர்ச்சியும், காண்போர் நடுங்கும் பயங்கரத் தன்மையும் இருக்க முடியாது. வேங்கடரத்னம் தமக்குள் நினைத்துக்கொண்டார். முடியப்படாத அவளது கருங்குழல், தோள்களிலும் முதுகிலும் அலை அலையாகப் புரண்டு கொண்டிருந்தது. தாழம்பூவின் இரண்டொரு மடல்களையும் சிறு மல்லிகைச்சரம் ஒன்றையும் முடியப்படாத கூந்தலின்மேல் பிறைச் சந்திரனைப் போல வளைத்துச் சூடிக்கொண்டிருந்தாள். அந்த மணம் பால்கனியின் மேலிருந்த அவர் நாசித்துளை களை ஊடுருவி அவரைக் கிறங்க அடித்துக் கொண்டிருந்தது. முகம்! ஈடு இணையற்ற அழகின் இருப்பிடம். மூக்கில் பேஸ்ரி, வைரக் கற்கள் நிலா ஒளியில் பளிச் பளிச்' என்று மின்னின காதுகளில் கரிய கூந்தல் வளைவுகளுக்கு இடையே ஆடும் முத்துச் சிமிக்கிகள். அவள் கண்கள்! அவற்றின் நீட்சியும் மருட்சியும், எல்லாவற்றிற்கும் மேல் பார்ப்பவர்களைச் சொக்க வைக்கும் மைதீட்டியது போன்ற இயற்கைக் கருமையும், ஐயமற அவளை ஒரு மோகினிப் பிசாசு - என்றே எண்ணிக் கொள்ளச் செய்தன வேங்கடரத்னத்தை நல்ல பாம்பு படமெடுத்து நெளிவதுபோன்ற அவளது அந்த இடுப்பு: சிருஷ்டி கர்த்தாவின் ஸெளந்தரியத் தேர்ச்சிக்கு அது ஒர் எடுத்துக்காட்டு.

எல்லாவற்றிற்கும் மேல் அங்கே சிமெண்ட் மேடையில் ரோஜா மலர்களுக்கு நடுவே உட்கார்ந்து அவள் செய்து கொண்டிருந்த காரியம்?.

அதுதான் அவரை நிலைகொள்ள முடியாமல் மனம் பதறச் செய்தது! ஆம்! அவருடைய பேனாவிலேயே அவர் எழுதிவைத்திருந்த தொடர்கதையின் பகுதிகளைப் படித்து, அடித்தும், சிலவற்றைத் திருத்தியும், ஏதேதோ மனம்போன போக்கில் நாசம் செய்து கொண்டிருந்தாள்!

'கீழே இறங்கிச் சென்று அவளிடமிருந்து அதைப் பிடுங்கிக் கொண்டு, திரும்பிப் பாராமல் ஓடிவந்து மாடிக் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு விட்டால்