பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1008

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

என்ன? - என்று எண்ணினார். ஆனால், கால்கள் நின்ற இடத்திலிருந்து அசைந்தால் தானே? அவருடைய பாதங்கள் இரண்டுமே உணர்ச்சியற்று மரத்துப் போயிருந்தன.

மின்னல் வேகத்தில் வேறோர் பயங்கரமான அனுமானத்தைச் செய்தது அவர். மனம் ஒரு வேளை, சென்ற வருடம் தற்கொலை செய்து கொண்ட காதம்பரியின் ஆவியோ? - இப்படி நினைக்கும்போதே உடல் முழுவதும் உதறலெடுத்து நடுங்கியது அவருக்கு காதம்பரியும், ரகுராமனும் அதே பங்களாவில் தங்கியிருந்ததாக 'வாட்ச்மேன் கூறியது நினைவுக்கு வந்ததும், மேற்படி பயங்கர அனுமானம் அவர் உள்ளத்தில் வலுப்பட்டது. ‘காதம்பரி, ரகுராமன் என்ற அதே பெயர்களை அமைத்து அவர்களுடைய தற்கொலைச் சம்பவத்தையும் இணைக்க முயன்றதனால் தன்மேல் கோபமுற்று, தன் தொடர் கதையை அபகரித்துக்கொண்டு போவதோடன்றித் தன்னையும் பழி வாங்குவதற்கென்றே காதம்பரியின் பேய் அங்கே வந்து உட்கார்ந்திருப்பதாக ஒரு பயப்பிரமை - பிராந்தி - அவர் மனத்தில் அழுத்தமாக உண்டாயிற்று! அந்தப் பிரமை ஏற்பட்டபோதே சுவாசக் குழாய்கள் அடைத்துக் கொண்டு மூச்சுவிடுவதே நின்று போகும்போலிருந்தது அவருக்கு.வேங்கடரத்னம் தன் நினைவை இழந்தார். அவருக்குத் தலை சுற்றியது.

இறுதியாக அவர் நினைவிழந்து மயங்கிக் கீழே விழும்போது, “விடாதே. பி.டி. இதோ, இங்கே இந்தப் பங்களாவுக்குள்ளேதான் இருக்கிறாள். இதோ.. இந்த சிமெண்ட் மேடையிலே. ரோஜாச் செடிகளுக்கு நடுவிலே' - என்று கூப்பாடு போட்டுக்கொண்டு இரண்டு மூன்று பேர் திறந்து கிடந்த பங்களாக் கதவுகளைக் கடந்து உள்ளே ஓடிவருவதையும், அந்த யுவதி காகிதக் கற்றைகளையும், பேனாவையும் வீசி எறிந்துவிட்டு ஒடுவதையும், மங்கிய கண்களால் கண்டார். அதன்பின் அவருக்குத் தன் நினைவில்லை.அப்படியே மூர்ச்சையாகிப்பால்கனியில் விழுந்து கிடந்தார்.அதன் பின் நடந்தவை எவையுமே அவருக்கும் ஒன்றும் தெரியாது.

முகத்தில் குளிர்ந்த தண்ணிர்த் துளிகள் அடுத்தடுத்து விழவே வேங்கட ரத்தினத்திற்கு மெல்ல மெல்ல பிரக்ஞை வந்தது. அவர் தன் நினைவோடு கண்களை விழித்துப் பரக்கப் பரக்கச் சுற்றி நின்றவர்களைப் பார்த்தார். சுப்பராமன் கையில் தண்ணிர்ச் செம்புடனே நின்றுகொண்டிருந்தான். அவனுக்கு அந்த அர்த்தராத்திரிக்கு மேலே தன் பங்களாவில் நடந்த விஷயம் எப்படித் தெரிந்தது?’ என்று வியப்போடு அடுத்து நின்றவர்கள் மேல் பார்வையைச் செலுத்தினார் அவர்.

 மறுவிநாடி மீண்டும் மூர்ச்சை வந்து விடும்போல இருந்தது அவருக்கு கையில் தண்ணிர்ச் செம்போடு நின்ற வேங்கடரத்னத்தின் நண்பர் சுப்பராமனுக்கு அருகே தென்காசி வக்கீல் அந்த மோகினிப் பேயின் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு நின்றார். அவருக்குப் பக்கத்தில் காவியுடை அணிந்த தாடிச் சாமியார் ஒருத்தரும் நின்று கொண்டிருந்தார்! 

"பயப்படாதே! இவள் என் மச்சினிதான், பேய் பிசாசு இல்லை! கொஞ்சம் சித்த ஸ்வாதீனம் போதாது. அதுதான் இப்படி நடுராத்திரியில். சுப்பராமனிடமிருந்து இந்தச் சொற்களைக் கேட்டிருக்கவில்லையானால் வேங்கடரத்னம் மீண்டும் கட்டாயம் மூர்ச்சை போட்டு விழுந்து இருப்பார்.