பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/388

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

137. வேலையும் விசாரணையும்

ன்றுடன் நான் வேலையிலிருந்து நீக்கப்பட்டுச் சரியாக ஒரு வாரமாயிற்று. கையில் கணக்குத் தீர்த்துக் கொடுத்து சம்பளத்துடன் வெளியேறும் போது கூட எனக்கு இவ்வளவு மன வேதனையில்லை; கிடைத்த பணத்தைக் கொண்டு இரண்டு மூன்று வாரங்களைக் கடத்தி விட்டால் வேறு ஏதாவது சான்ஸ் பிடித்துக் கொண்டு விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், அன்றிலிருந்து அந்த நம்பிக்கைக்குத் தலைவலி பிடிக்க ஆரம்பித்தது.

ஏறக்குறைய ஒரு வாரம் வரை என்னுடைய வேலை நீக்கம் ஒருவருக்கும் தெரியாதபடிகடத்தி விட்டேன். அதற்குப் பிறகுதான் ஆரம்பமாயிற்று அந்த அநுதாப விசாரணைகள். அதை 'அநுதாப விசாரணை’ என்று நான் கூறுவது விசாரிப்பவர் களுடைய அகராதியில் கண்டது. என்னுடைய வார்த்தையில் சொல்லப் போனால் அதைக் ‘கொல்லாமற் கொல்லும் கேள்வி’ என்று தான் சொல்வேன். அப்படிச் சொல்லும் அளவுக்கு நான் அநுபவித்து விட்டேன். நான் மட்டுமென்ன? வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கிய பட்டதாரிகள், படித்த இளைஞர்கள் எல்லோருமே இதை அநுபவிக்கத் தவறுவதில்லை. பட்டதாரிகளும், படித்தவர்களும் கூட வேலை கிடைக்கவில்லை என்பதற்காகக் கவலைப்படுவதைக் காட்டிலும், வேலையைப் பற்றித் தங்களிடம் இரக்கத்தோடு விசாரிக்கும் அநுதாபிகளுக்காகத் தான் கவலைப்படுகிறார்கள். அந்த ‘அநுதாபி’களின் வார்த்தைதான் அவர்கள் தைரியத்துக்கும் நம்பிக்கைக்கும் உலை வைத்து உண்ணவும், உறங்கவும் முடியாமல் உருக வைக்கிறது. இவர்கள் தலை தட்டுப்பட்டால் நடுங்கி மறைந்து நடக்கக் கூட வேண்டியிருக்கிறது. இவர்களைச் சந்தித்து விட்டால் அந்தக் கேள்வியைக் கேட்டு விடுவார்களே என்ற பயம்தான் காரணம்.

என்னைப் பொறுத்த வரையில் இந்த அநுதாப விசாரணையை நான் ரூமெடுத்துக் கொண்டிருக்கும் வீட்டுக்காரர்தான் முதன் முதலில் ஆரம்பித்து வைத்தார். ‘முடித்து வைத்தது யார்?’ என்று கேட்கிறீர்களா? எனக்கு வேலை கிடைக்கிற வரை இந்த விசாரணைக்கு முடிவேயில்லையே!

அது மட்டுமா? இந்த விசாரணையைக் கேட்பதற்குத் தகுதியே வேண்டியதில்லை. என்னுடைய காலேஜ் புரொபஸராகிய ஸ்ரீமான் கண்ணுசாமிப் பிள்ளையிலிருந்து காலையில் என் ரூமைப்பெருக்குவதற்கு விளக்குமாறும் கையுமாக வரும் வேலைக்காரி வடிவாம்பாள் வரை யாரும் கேட்கலாம்.அவரவர் தரத்திற்குத் தக்கபடி வார்த்தைகளும் விசாரணையின் தோரணைகளும்தான் வேறுபாடு அடைகின்றன.