பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : வேலையும் விசாரணையும்

1011

“சார், ஏதோ கேள்விப் பட்டேனே! அது நிஜம்தானா? மேற்கொண்டு என்ன செய்யறதாக உத்தேசம்? எங்கேயாவது ஏற்பாடு செய்திருக்கீங்களா? இப்படியே இருந்தாக் கட்டி வரணுமே”

இது என் வீட்டுக்கார முதலியாரின் அநுதாப விசாரணை.

“ஆமாம், ஸார்! வேறே எங்கேயாவது பார்க்கணும்” இது நான் முதலியாருக்குச் சொன்ன பதில். முதலியார் விசாரிக்கும் போது பதில் சொல்லும் அளவுக்கு என் தைரியமும், நம்பிக்கையும் சோர்வடையாமல் இருந்தனவே, அதை விசேஷமாகச் சொல்லவேண்டும்!

“மிஸ்டர் சாரதி! உங்களை ரிலீவ் பண்ணிவிட்டதாகக் கேள்விப்பட்டேன். நம்ம காலேஜிலேகூட ஒரு ‘கிராஜ்வேட் லைப்ரரியன்’ வேணும்! ஆனால், அதுக்கு பி.ஏ. பர்ஸ்ட் கிளாஸ் இருக்கணுமே…?”

இது புரொபஸர் ஸார் செய்த அநுதாப விசாரணை,

“அப்படியா?” இவ்வளவுதான் அவருக்கு நான் சொன்ன பதில். அவர் விடை பெற்றுக் கொள்ளும் போது என் கைகள் யந்திரம் போல இயங்கித் தாமாகவே ஒரு வணக்கத்தைச் செய்து வைத்தன. இப்போது என் உறுதியில் அதிர்ச்சியின் ஜன்னி லேசாக ஆரம்பித்தது.

முதுகில் ஓங்கி ஓர் அறை விழுந்தது! அப்போது எனக்கு அது அறையாகத்தான் இருந்தது. “ஏண்டா பழி! ஆந்திர மாகாணம் பிரிஞ்சாலும் பிரிஞ்சது; உன் பாடு ஆபத்தாய்ப் போச்சேடா! அப்புறம் என்னடா செய்யப் போறே!” ஆந்திர மாகாணம் தனியாகப் பிரிந்த பின் சென்னையிலிருந்த எனது கம்பெனி ஹைதராபாத்துக்குப் போய் விட்டது.

இது கல்லூரி நண்பன் ரகுவின் ஹாஸ்யம் கலந்த அநுதாபம். ரகுவுக்கு நான் பதிலே சொல்லவில்லை. இன்னும் ஒரு வாரமாக என் வேலை போனது பற்றி நடந்த அநுதாப விசாரணைகள் முழுவதையும் எழுதினால், அது உங்கள் பொறுமைக்குப் பரீட்சை நடத்தியதாக ஆகி விடும்.

சந்தித்தவர்களிடம் எல்லாம் இதே விசாரணை, கண்டவர்கள் ஒன்று கூடிப் பேசி வைத்துக் கொண்டது போல ஒருவர் தவறாமல் இதையே கேட்டார்கள். கேட்டார்களென்றா சொன்னேன்? இல்லை, இல்லை! வார்த்தைகளாகிய ஈட்டிகளை மீண்டும் மீண்டும் பாய்ச்சினார்கள். வெந்த புண்ணில் வேல் கொண்டு எறிந்தார்கள். நான் இனிமேல் ரூமை விட்டு வெளியே போகக் கூடாது என்ற அளவுக்கு வேலை நீக்க விசாரணை பெருகி, வெள்ளமாகப் பரந்து வியாபித்து விட்டது. நான் வேலையே பார்க்கப் போவதில்லை. முடிந்தால் வாழ்கிறேன், இல்லையானால் ஒரு சாண் கயிறு கூடவா கிடைக்காமற் போய்விடும்? இந்த வேலையில்லா நிலையும் போதும்; விசாரணையும் போதும்! - இப்படி ஒரு மயான வைராக்கியம் என் மனத்திற் படியும்படி செய்து விட்டது இந்த அநுதாப விசாரணை அனுபவம்!