பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1016

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

மனத்தை அது தீராக் குறையாக அரித்தெடுத்துக் கொண்டு வந்தது. கார்த்திகையன்றும், தீபாவளியன்றும், ஒரு கூடை நிறைய மத்தாப்புப் பெட்டிகளை அள்ளி வைத்துக் கொண்டு ஊர்க் குழந்தைகளை எல்லாம் கூப்பிட்டுக் கொடுப்பான் அவன். இதனால் மழலை மாறாத ஊர்க் குழந்தைகளிடம், ‘மத்தாப்பு மாமா’ என்றொரு செல்லப் பெயர் கூட அவனுக்கு ஏற்பட்டிருந்தது. அவனுக்கு முதல் முதலாகப் பேரும், புகழும் ஏறியது கண்ணுடைய நாயகி அம்மன் திருவிழாவில் வாண வேடிக்கை விட்ட போதுதான். அதனால் பழைய நன்றி மறவாமல் வருடா வருடம் அந்த அம்மனுக்கு அவன் வாண வேடிக்கை உபயம் செய்து வந்தான். “தாயே! என் தொழில் ஒளி நிறைந்தது. ஒளியால் வேடிக்கை காட்டுவது. என்னுடைய வாணங்கள் வானத்து இருளெல்லாம் போக்குகின்றன. ஆனால், என் வீட்டு இருளை நீ இன்னும் போக்கவில்லையே!” என்று அம்மனிடம் அவன் பிரார்த்தித்துக் கொள்ளுவான்.

‘குழந்தையில்லையே’ என்ற ஏக்கம் விநாயக சுந்தரத்துக்கும், அவன் மனைவிக்கும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வந்தது. இராமேசுவரம், காசி என்று தல யாத்திரை போய் வந்தார்கள் அவர்கள். பழைய கால நம்பிக்கைகளையும் புறக்கணிக் காமல், அரசமரத்துக்கும், வேப்பமரத்துக்கும் கலியாணம் செய்யும் சடங்கைக் கூடச் செய்தார்கள்.

என்ன செய்தும் பயனில்லை. கடவுளும், விதியும், நல்வினையும் அவர்கள் மட்டில் கண்களைத் திறந்து கருணையோடு பார்க்கவேயில்லை.

கடவுளுக்குத்தான் என்ன ஓரவஞ்சனை? வைத்துப் பேண முடியாத ஏழைக் குடும்பங்களில் அவர்களால் கட்டிக் காக்க இயலாத அத்தனை குழந்தைகள்! இல்லையே என்று ஏங்குபவனுக்குப் பேருக்கு ஒரு குழந்தை கூட இல்லையாகவே போய்க் கொண்டிருக்கிறது.

விநாயக சுந்தரம் அவன் கண் காணப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறான்? காய்ப்பில்லாத புளியந்தோப்பும், இருபது ரூபாய் வாடகை வருமானமும் தவிர, வேறு வக்கில்லாத விறகு கரி மூட்டைக் கடைக் கண்ணுசாமிக்கு ஐந்து பெண் குழந்தைகள், மூன்று ஆண் குழந்தைகள்.மனிதன் சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறான். சண்டைக் கெடுபிடி ஓய்ந்து ரேஷன் கட்டுப்பாடுகளையும் எடுத்த பின் கரி, விறகு வியாபாரம் படுத்து விட்டது. சுற்றிலும், மலையும் காடும் உள்ள கிராமத்தில் எந்தப் பயல் காசு கொடுத்து விறகு வாங்குவான்? எப்போதோ பாரஸ்ட்காரன் கண்ணில் மண்ணைத் தூவி மலையை மொட்டையடித்து அடுக்கிய விறகுகளும், கரி மூட்டைகளும் ஆண்டாண்டுக் கணக்காகக் குவிந்து கிடக்கின்றன. பெரிய குடும்பம், கண்ணுசாமி சமாளிக்கமுடியாமல் திணறுகிறான். .

கண்ணுசாமிக்கு விநாயகசுந்தரத்தின் சொத்துச் சுகங்களில் ஒரு கண் இருந்தது. எட்டுக் குழந்தைகளின் பாரத்தை எவன் தாங்குவது? கடைசிப் பையனை (மூன்று வயது) விநாயக சுந்தரத்துக்குத் தத்துக் கொடுத்து விடலாமா என்று அவனுக்கு ஒரு நப்பாசை உள்ளூற உண்டு. இவன் ஆசைப்பட்டால் மட்டும் போதுமா? விநாயக சுந்தரத்துக்கு அந்த எண்ணம் உண்டாக வேண்டாமா? உண்டாகவில்லையே?