பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : வாணவேடிக்கை

1017

பேச்சுப் போக்கில் அந்த விஷயம் நாலு பெரியவர்கள் மூலம் விநாயக சுந்தரத்தின் காதில் விழும்படி தானே ஏற்பாடு செய்தான் கண்ணுசாமி. விநாயக சுந்தரம் அதைப் பொருட்படுத்தினதாகவே தெரியவில்லை. அலட்சியமாக இருந்து விட்டான். நெய்ப் பந்தம் பிடிக்கப் பேரன் கிடைக்காமலே, அவன் தந்தையும் இறந்து போய் விட்டார்.

அவனுக்கு வயது கிட்டத்தட்ட ஐம்பதுக்கு மேலாகி விட்டது.விநாயக சுந்தரத்தின் மனைவிக்குக் கூட ‘இனிமேல் இல்லை’ என்கிற மாதிரி ஓர் அவநம்பிக்கை ஏற்பட்டு விட்டது. “என்னங்க. இனிமேலும் இப்படி இருந்தா நல்லா இல்லே! ஏதாவதொரு வழியைப் பண்ணுங்க. சொந்தப் பிள்ளை நமக்குக் கொடுத்து வைக்கலை. தத்துப் பிள்ளைதான் கொடுத்து வச்சிருக்குப் போலிருக்கு” என்று சுவீகாரத்தைப் பற்றி அவனுக்கு நினைவு படுத்தினாள் அவள்.

“பார்க்கலாம்! அம்மன் திருவிழா முடிந்து விடட்டும். ஓர் ஏற்பாடு செய்வோம்!” என்றான் விநாயக சுந்தரம். கரி மூட்டைக் கண்ணுசாமியின் மனைவி அடிக்கடி தன் கடைக்குட்டிப் பயலை இழுத்துக் கொண்டு விநாயக சுந்தரத்தின் வீட்டுக்கு வந்து போக ஆரம்பித்தாள்.

“அடே பயலே! அவங்க வீட்டுக்குப் போனா அந்த ஆச்சி கிட்ட ஒட்டிப் பழகுடா, அவங்கதான் இனி உனக்கு அம்மாடா” என்று பாதி வேடிக்கையாகவும், பாதி உண்மையாகவும் தன் கடைசிப் பையனை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தான் கண்ணுசாமி. விநாயக சுந்தரம் அந்த வருடம் கண்ணுடைய நாயகி அம்மன் விழாவுக்காகப் பிரமாதமான முறையில் வாண வேடிக்கை உபய ஏற்பாடுகள் செய்வதில் ஆழ்ந்திருந்தான்.

அவன் மனைவிக்குக் கூடவரவர இதெல்லாம் நம்பிக்கை குறைந்து விட்டது.”இது ஏன் இவரு இப்பிடிக் கைக்காசைக் கரியாக்கி வாணவேடிக்கை விடறேன் பேர்வழியே என்று வருசந்தவறாமே அலையறாரு. இவ்வளவு செய்தப்பறமும் அந்த அம்மன் இவர் பக்கம் கண் திறந்து பார்த்தாளா?” என்று நினைக்கவும், அக்கம் பக்கத்துப் பெண்களிடம் சொல்லவும் தலைப்பட்டாள்.

“இந்தாங்க! இந்த வாணவேடிக்கை உபயத்துக்குச் செலவழிக்கிற காசை நாலு ஏழைப் பிள்ளைகளுக்குச் சோறு போட்டாலும் பிரயோசனமுண்டு. எதுக்காக இப்படி அலைஞ்சு இந்த வயசுலே உடம்பைக் கெடுத்துக்கணும்? எல்லாம் இத்தனை வருடம் செய்து கட்டிக் கிட்ட புண்ணியம் போதும்” என்று ஒருநாள் அவனிடமே அவள் துணிந்து அதைச் சொல்லி விட்டாள்.

முகத்தில் சினம் பொங்கத் தன் மனைவியை ஏறிட்டுப் பார்த்தான் விநாயககந்தரம். “இனி மேல் என்னிடம் இப்படிப் பேசாதே! இந்த வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாம் அந்த அம்மன் கொடுத்ததடி! எனக்கு நன்மை செய்தாலும், செய்யாவிட்டாலும் அவள் என் கண் கண்ட தெய்வம். என்ன வினைப் பயனோ? இவ்வளவு பெருமைகளையும் எனக்குக் கொடுத்திருக்கும் அவளுக்கு என் வீட்டில் ஒரு குழந்தையைக் கொடுக்க