பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1018

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

மட்டும் மனம் வரவில்லை.அதற்காக நான் சோர்ந்து விட மாட்டேன். அவளையே என் குழந்தையாகப் பாவித்து வாண வேடிக்கை காட்டிக் கொண்டு வருகிறேன்” என்று பக்தி தொனிக்க, நாத் தழுதழுக்கக் கூறினான் விநாயக சுந்தரம். அப்போது அவன் முகத்தில்தான் எவ்வளவு ஒளி? எத்தனை நம்பிக்கை?

அவன் மனைவிக்குப் பதில் பேசுவதற்கே வாய் இல்லாமல் போய் விட்டது.

கோவில் உற்சவ அழைப்புப் பத்திரிகையில் விநாயக சுந்தரத்தின் வாண வேடிக்கை உண்டு என்பதைப் பிரமாதமாக விளம்பரப்படுத்தியிருந்தார்கள். அந்தப் பெயர் உற்சவத்தில் எவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டுவதற்குப் பயன்படும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

எல்லா வருடங்களையும் போல் இல்லாமல் அந்த வருடம் புதுப் புது வாணங்களாகச் செய்திருந்தான் விநாயகசுந்தரம். பத்து நாள் திருவிழா. முதல் ஒன்பது நாட்கள் அவனுடைய ஆட்கள் வாண வேடிக்கையைக் கவனித்துக் கொண்டார்கள். அவன் சுவாமி புறப்பாட்டு ஊர்வலத்தில் தர்மகர்த்தாவோடு நடந்து கொண்டே வாண வேடிக்கை ஏற்பாடுகளை மேற்பார்த்து வந்தான். விநாயககந்தரம் தன் ஆட்களை அதிகாரம் பண்ணி வேலை வாங்குகிற மிடுக்கே தனி.

“ஏ! அப்பா ஏழுமலை! சுற்றிக் குழந்தைப் புள்ளைங்களா நிக்கிது. வாணத்தைப் பார்த்து விடு.”

“டேய் சுதரிசனம், ஏரோப்ளேன் வாணத்தைத் தலை கீழாப் பிடிச்சுக் கொளுத்தி விடாதே! மூக்கிலே முகரையிலே பாய்ஞ்சு அடிச்சிடப் போவுது”

“யப்பா தீவட்டி தள்ளி நில்லு! வாணம் விடறது தெரியலே” - இது சாமிக்குத் தீவட்டி பிடிக்கிறவனை நோக்கிச் சொன்னது.

“ஏ கிழவி! ஒதுங்கி நின்னு பாரு! அப்பிடி வாயைத் திறக்காதே. வாணம் வாயிலே வந்து விழுந்துடப் போவுது.”

அதிகாரமும், அதட்டலும், சிரிப்பும், செயலுமாக அம்மன் புறப்பாட்டை நடத்திக் கொண்டு போவான் விநாயக சுந்தரம், வாண வேடிக்கையை விட அவன் வாய் வேடிக்கை பிரமாதமாக இருக்கும். சில சமயங்களில் அவனது நகைச்சுவைப் பேச்சே வாணமாக இருக்கும்.

பத்தாவது நாள் கடைசித் திருவிழா. எள் போட்டால் கீழே விழ இடமில்லை. ஒரே கூட்டம். அக்கம் பக்கத்து ஊர் மக்களெல்லாம் வந்திருந்தார்கள். அம்மன் புறப்பாடாகிக் கோவில் வாசலைக் கடந்து வீதியில் வந்து விட்டாள். கடைசி நாள் அன்றைக்கு மட்டும் விநாயக கந்தரம் தன் கையாலேயே வாணம் விட்டுக் கொண்டு வருவான். அரை வேஷ்டியை முழங்காலுக்குமேல் தார்ப் பாய்ச்சிக் கட்டிக் கொண்டு. திறந்த மார்போடு திருநீற்றுக் கோலங்களுடன் அன்று அவன் பரம பக்தனாகக் காட்சியளிப்பான். அவன் பக்கத்தில் ஓர் ஆள், கூடைநிறைய வாணத்தோடு வருவான்.