பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : வாணவேடிக்கை

1019

விநாயக சுந்தரம் கூடையிலிருந்து ஒவ்வொரு வாணமாக எடுத்துத் தீப்பொருத்தி மேலே விடுவான். அந்தக் கலையை வைத்துக் கொண்டு அற்புதமான வேடிக்கையைக் காட்டுவான் அவன். தரையில் நின்று கொண்டு வானில் ஒளியைச் சிதறி விளையாடும் அந்த விந்தை அவனுடைய தனித் திறமை.

அதனால்தான் கடைசி நாளில் அத்தனைக் கூட்டம் கூடியிருந்தது. வாண வேடிக்கை பார்ப்பதற்காகத் தெருவின் இரு சிறகிலும் கூட்டம். வீடுகளின் மொட்டை மாடிகளிலும் கூட்டம். அன்றைக்கு ஒரு நாள் மட்டும் யாரும் யாரையும் கண்டிக்க முடியாது. யார் வீட்டு மாடியில் எவர் நிற்பதென்ற உரிமைப் பேச்செல்லாம் கிடையாது. உள்ளூர் ஆட்கள், வெளியூர் ஆட்கள், வேறு தெரு ஆட்கள், எல்லோரும், எல்லோர் வீட்டு மாடியிலும் சுவாதீனமாக வாண வேடிக்கை பார்க்க ஏறி நின்று கொள்ளுவார்கள்.

அம்மன் புறப்பாடாகித் தெருவில் இறங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் வாண வேடிக்கை ஆரம்பமாயிற்று. அம்மன் ஒவ்வோரிடத்திலும் நின்று மெல்ல நகர்ந்தாள். விநாயக சுந்தரத்தின் கைவரிசைகள் விண்ணின் இருள் நீலப்பரப்பில் பல வண்ண ஒளிகளை உமிழ்ந்து கொண்டிருந்தன. ‘எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்’ என்று இராமன் வில் ஒடித்த பெருமையைக் கவிஞர் கம்பர் பாடின மாதிரி விநாயக சுந்தரம் வாணம் எடுத்ததை எல்லோரும் கண்டார்கள். சர்ரென்று அது மேல் நோக்கி எழுந்ததைக் கண்டு வியக்குமுன் ஒளி மலர்களாக வானில் மலர்ந்து வியப்பூட்டியது அந்த வாணம்.

கட்டாந்தரையில், மொட்டைப் புளியமரத் தோப்பில், ஓட்டுக் கட்டிடத்தில் இத்தனை விந்தைகளை அவனால் எப்படிப் படைத்து, வித்தை காட்ட முடிகிறதென்று பட்டிக்காட்டு ஜனங்களுக்கு ஒரே ஆச்சரியம்.

அம்மன் ஊர்வலம் மெதுவாக நகர்ந்து தெருவைக் கடந்து கொண்டிருந்தது. மேளக்காரரும், நாதசுரக்காரரும் வெளுத்து வாங்கினார்கள். பொய்க்கால் குதிரைக்காரர்கள் நிஜக்குதிரை மாதிரியே ஆடிக் காட்டினார்கள். ஆனால், அதையெல்லாம் யார் கவனித்தார்கள்?

விநாயகசுந்தரத்தின் வாணவேடிக்கை ஒன்றைத்தானே அத்தனைக் கூட்டமும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

பாதித் தெரு வருவதற்குள்ளேயே தன்னைப் பற்றிப் பிரமாதமான புகழ் வார்த்தைகள் அவன் காதுகளில் விழுவதற்குத் தொடங்கி விட்டன. -

“அடேயப்பா! இதற்கு முன் எந்த வருடத்திலும் வாண வேடிக்கை இவ்வளவு பிரமாதமாக அமைந்ததில்லை. விநாயக சுந்தரம் ஜமாய்த்து விட்டார்!”

தர்மகர்த்தா அவன் காதில் கேட்கும் படியாகவே யாரிடமோ அவனைப் புகழ்ந்து கொண்டிருந்தார். அவனுடைய மனத்திலும், கைகளிலும் உற்சாகம் முறுக்கு ஏறியிருந்தது. தர்மகர்த்தா ஒருவருடைய புகழ்ச்சிக் குரல்தான் அவனால் அந்தக்