பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1020

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

கூட்டத்தில் அடையாளம் புரிந்துகொள்ள முடிந்த குரல். அடையாளம் புரியாத இன்னும் எத்தனையோ குரல்கள் அவனை அவன் வித்தையை, அவன் காது கேட்கும்படியே புகழ்ந்து கொண்டிருந்தன.

ஊர்வலம் தெருத் திரும்பி விட்டது. ஒரு மூலையில் ஏழெட்டுக் குடிசைகள். அதற்கருகில் ஒரு பாழ் மண்டபம். அது ஊரின் சேரி. மாடி வீட்டுக் குழந்தைகளுக்கெல்லாம் வாண வேடிக்கை பார்க்க மொட்டை மாடி இருந்தது. சேரிக் குழந்தைகள் என்ன செய்யும் பாவம்? கிட்டவும் வர முடியாது.எட்டி நின்று பார்க்க மாடியும் அங்கே இல்லை.

மேலே ஏறிச் செல்லப் படியுடன் இருந்த அந்தப் பாழ் மண்டபம் சேரிக் குழந்தைகளின் குறையைப் போக்கியது. அந்த இருட்டில் அதன் மேலே ஏறி நின்று திருவிழா வாண வேடிக்கை பார்ப்பதற்காக அந்தக் குழந்தைகளை யாரும் ஏன் என்று கண்டிக்கப் போவதில்லை. பார்க்கா விட்டாலும் ஏன் போய்ப் பார்க்கவில்லை என்று யாரும் கேட்கப் போவதில்லை.

அந்தச் சிறு குழந்தைகளுக்கு ஆசையில்லாமலா போகும்? உலகத்திலுள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் ஆசை ஒரே மாதிரித்தானே இருக்க முடியும்? குஞ்சும் குளுவானுமாகச் சேரியைச் சேர்ந்த ஏழெட்டுக் குழந்தைகள் அந்தப் பாழ் மண்டபத்தின் மேல் வந்து நின்று கொண்டிருந்தன.

அம்மன் ஊர்வலம் பாழ் மண்டபத்தை அணுகிய போது கட்டிடங்கள் குறைந்து பெரும் பகுதி திறந்த வெளியாக இருந்ததனால், அதிகம் சக்தியுள்ள புது மாதிரி வாணம் ஒன்றை முதல் தடவையாகக் கொளுத்தி விட்டான் விநாயகசுந்தரம்.

வாணம் அவன் கையிலிருந்து புறப்பட்ட மறு விநாடி பாழ்மண்டபத்தின் உச்சியிலிருந்து வீல் என்று பயங்கரமாக ஒரு குழந்தையின் அலறல் ஒலித்தது.”என்ன? என்ன?” என்று பதறிய குரல்களும், பரபரப்பும் கலவரமுமாகக் கூட்டம் அலை மோதியது. ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை, ஆனால், விநாயக சுந்தரத்துக்கு உடனே புரிந்து விட்டது. கூட்டத்தை வகிர்ந்து கொண்டு மனம் பதறி ஓடினான். பாழ் மண்டபத்தில் ஏறினான். அங்கே தென்பட்ட காட்சியைக் கண்டதும் அவனுக்குக் குடல் பதறியது. சரீரம் கிடுகிடுவென்று நடுங்கியது. சிறு குழந்தை மாதிரி விக்கி விக்கி அழுதான்.

பாழ் மண்டபத்தில் நின்று கொண்டிருந்தசேரிக் குழந்தைகளில் ஓர் ஐந்து வயதுப் பெண் குழந்தையின் கண்களில் அவனுடைய வாணம் பாய்ந்து கோரப்படுத்தியிருந்தது. மற்றக் குழந்தைகளும் பயந்து போய் மிரண்டு அழுதன.

அப்படியே அந்தக் குழந்தையை வாரி எடுத்துக் கொண்டு உள்ளூர் லோகல் பண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினான் அவன்.

குழந்தைக்குக் கண் போய் விட்டது. மூன்று நாள் வரை ‘பார்க்கலாம், பார்க்கலாம்’ என்று சொல்லிக் கொண்டிருந்த டாக்டர் நான்காம் நாள் கண் போய்விட்டதென்று