பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : வாணவேடிக்கை

1021

தீர்மானமாகச் சொல்லி விட்டார். சேரி ஆட்களை விசாரித்ததில், அது தாய் தந்தையற்ற அநாதைக் குழந்தையென்று தெரிவித்தனர்.

குழந்தையை வண்டியில் போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்குத் திரும்பினான் அவன். வீட்டுக்குப் போகிற வழியில் கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் வந்தது. அவன் கை கூப்பினான். “தாயே! இந்த அநாதைக் குழந்தையின் கண்ணை என் கையால் பிடுங்கி எறிய வேண்டுமென்பதுதான் உன் சித்தமா? இதற்குக் கண் போயிற்று! எனக்குக் கண் கிடைத்து விட்டது” அவன் குரல் தழுதழுத்தது. அதே சமயம், அவன் மனத்தில் ஒரு மின்னல் மின்னியது.”இது அநாதைக் குழந்தையல்ல! தாய் தந்தையற்றதல்ல; இது நீதான். கண்ணுடைய நாயகியாகிய நீயேதான் கண்ணிழந்து என் வீட்டுக்கு வர இப்படி ஒரு குழந்தையாகப் பிறந்து தந்திரம் செய்திருக்கிறாய்!” பித்தனைப் போல் முணுமுணுத்தான் விநாயகசுந்தரம்.

குழந்தையை வண்டியிலிருந்து வீட்டுக்குள் சுமந்து கொண்டு போகும் போது அம்மன் சிலையையே தூக்கிக் கொண்டு போகிற மாதிரி பயபக்தியுடனே தூக்கிக் கொண்டு போனான் விநாயககந்தரம்.

ஆம்! வாணம் உலகத்துக்கெல்லாம் வேடிக்கை. அதைச் செய்கிறவனுக்கு அது ஒவ்வொரு கணமும் வினைதான்.

(1978-க்கு முன்)