பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : புகழ் என்னும் மாயை

1023

ரத்துச் செய்தார். அடுத்துத் தனக்கு மிக நெருங்கிய நண்பரான ‘மேக்-அப்’ நிபுணர் ஒருவருக்கு டெலிபோன் செய்து சில சாதனங்களோடு தன் பங்களாவுக்கு உடனே வருமாறு அவரை வேண்டிக் கொண்டார். கால் மணி நேரத்தில் ‘மேக்-அப்’ நிபுணர் டாக்ஸியில் வந்து சேர்ந்துவிட்டார்.

“யாரும் என்னை அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி தாராளமாக வெளியில் சுற்றி விட்டு வர வேண்டும். அதற்கேற்ற மாதிரியில் எனக்கு ஒரு மேக்-அப் போட்டு விடுவீரா?”

நடிக மணியின் விருப்பத்தைக் கேட்டு மேக்-அப் நிபுணர் திகைத்தார். ஆனாலும் மறுக்காமல் ஒப்புக் கொண்டார்.

முக்கால் மணி நேரத்தில் நடிக மணியை அவரது வீட்டிலுள்ளவர்களே அடையாளம் கண்டு கொள்ள முடியாதபடி உருமாற்றி விட்டார் மேக்-அப் நிபுணர். தாடியும், மீசையும், நரைத்த தலையும், மூக்குக் கண்ணாடியுமாக ஏதோ ஓர் ஏழைக் குடும்பத்து, நடுத்தர வயது மனிதனைப் போல் மாறியிருந்தார் நடிகமணி. காரியம் காதும், காதும் வைத்தாற் போல் பரம ரகசியமாக நடந்தது. ‘யாரிடமும் இதைப் பற்றி மூச்சுவிடக் கூடாதென்று’ மேக்-அப் நிபுணரிடம் உத்தரவாதம் வாங்கிக் கொண்டிருந்தார் நடிகர். வெளியே புறப்படுமுன் கண்ணாடியில் பார்த்துச் சரி செய்து, குரலை மாற்றிக் கொண்டு பேசவும் பழகிக் கொண்டார். நடிகரிடம் விடை பெற்றுக் கொண்டு மேக்-அப் நிபுணர் புறப்பட்டுப் போய் விட்டார். -

இரவு மணி எட்டே கால். படங்களில் நடித்துப் புகழ் பெற்ற நடிகமணி, வாழ்க்கையில் நடித்துப் பார்க்க வீட்டை விட்டு வெளியேறினார். மூக்குக் கண்ணாடியணிந்த கிழவராக அவர் புறப்பட்டார்.

“உலகத்துத் துன்பங்களே தெரியாமல் அரண்மனைச் சுகங்களில் மயக்கப்பட்டிருந்த புத்தர் அங்கிருந்து யாருக்கும் தெரியாமல், மெளனமாக உண்மை உலகை அறிய வெளியேறின போது அவருடைய மனத்திலும் இப்படித்தானே ஆவல்கள் துடித்திருக்கும்? உயிரும் சதையுமாக உண்மை உலகத்தைக் காண விரும்புவதில்தான் எத்தனை சுகம்!”

அவரது அந்தப் பிரம்மாண்டமான அரண்மனை போன்ற மாளிகையின் வாயிலுக்கு அப்பால் வெறும் கால்களால் நடந்து தெருவில் இறங்குவது நடிகமணியின் வாழ்வில் முதல் முதலாகப் புதிய அநுபவம். பங்களா வாயிற்படியில் இருந்தவாறே அழகிய பெரிய காரில் ஏறிச் செல்லும் வழக்கத்தை இப்போதுதான் முதல் முறையாக அவர் மீறுகிறார்.

'சே! சே! பங்களா வாயிலுக்கு இந்தப் பக்கம் தெரு இத்தனை அழுக்காகவா இருக்கும்? செருப்பாவது போட்டு கொண்டு வந்திருக்கலாமே!’ - வீட்டில் இருந்தவை எல்லாம் உயர்ந்த ரகத்துப் புதுச் செருப்புக்கள். அவற்றைக் காலில் அணிந்துகொண்டு புறப்பட்டால், போட்டுக் கொண்டிருக்கும் வேடத்துக்குப் பொருந்தாது. சேறும்