பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1024

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

சக்தியுமாக இருந்த தெருவில் கூச்சத்தை விட்டுத் துணிந்து விரைவாக நடந்தார். வெறுங்கால்களால் மண்ணை மிதித்தறியாத பட்டுப் பாதங்கள் சிறிது நொந்தன. கால்கள் இலேசாக உறுத்தி வலிப்பது போலிருந்தது.

தெருவின் இரு புறத்துச் சுவர்களிலும் தான் நடித்த படங்களின் பெரிய பெரிய சுவரொட்டிகள் அழகாகவும், கவர்ச்சியாகவும் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே நடந்தார் நடிகர்.

மேக்-அப் நிபுணரை அவருடைய வீட்டில் கொண்டு போய் விடுவதற்குச் சென்றிருந்த நடிமணியின் கார் எதிரே வீதியில் திரும்பி வந்து கொண்டிருந்தது. கப்பல் போல நீளமாக, அகலமாக, அழகாக, எத்தனை பெரிய கார்! வீதியையே நிறைத்துக் கொண்டு கம்பீரமாகப் பாய்ந்து வந்தது. அவர் விலகிக் கொண்டு காருக்கு வழி விடவில்லை. கொஞ்சம் நடு வீதியிலேயே தயங்கி நின்று விட்டார்.கார் கிறீச்சிட்டு நின்றது.

“கிழட்டுப் பொணமே! கண்ணு அவிஞ்சு போச்சா? காரிலே விழுந்து சாவாதே. பார்த்து நட!” காரை நிறுத்தி அவருடைய டிரைவரே ஒரு நிமிடம் அவரைத் திட்டி விட்டுப் போனான்.

“கண் அவிந்து போகிறதாவது? இப்போது தானே கொஞ்சம் கொஞ்சமாகக் கண்ணே திறக்கத் தொடங்கியிருக்கிறது!”

மேலே நடந்தார் நடிகர். காஸ் விளக்குகளும் பாண்டு வாத்திய முழக்கமுமாகச் சினிமா விளம்பர வண்டிகள் எதிரே வந்தன. முன்னால் ஓர் ஆள் எல்லோருக்கும் விளம்பர நோட்டீஸ் கொடுத்துக் கொண்டு வந்தான்.சிறு குழந்தைகள் நோட்டீசுக்காக அவனைச் சூழ்ந்து கொண்டு மொய்த்தன. அவனோ குழந்தைகளை விலக்கித் தள்ளி விட்டு, ஒதுங்கி நடந்து கொண்டிருந்த அவர் கையில் ஒரு நோட்டீஸைக் கொண்டு வந்து திணித்து விட்டுப் போனான். சிரித்துக் கொண்டே தெரு விளக்கு வெளிச்சத்தில் நோட்டீஸை விரித்துப் படித்தார் அவர். “நடிகமணியின் சிறந்த நடிப்புக்காக யாவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்” என்ற வாக்கியத்தைப் படித்த போது சிரிப்புப் பொங்கிக் கொண்டு வந்தது அவருக்கு.

நடிகமணி மிகச் சிறந்த இதுவரை எந்தப் படத்திலுமே நடித்திராத நடிப்பை இன்று இந்த வீதியின் இருளில் அல்லவா நடித்துக் கொண்டிருக்கிறார்? இதைப் பார்க்க யாரும் காசு கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டு வரக் காணோமே!

“தாத்தா! தாத்தா! அந்த நோட்டீஸை எனக்குக் குடு!” ஒரு சிறு பெண் குழந்தை ஓடி வருகிறது. எவ்வளவு அழகான பிஞ்சு முகம் இந்தக் குழந்தைக்கு?

“நீயே வச்சுக்க, பாப்பா! எனக்கெதுக்கு?” என்று குழந்தையின் பிஞ்சுக் கைகளில் அந்த நோட்டீஸைக் கொடுத்துவிட்டு முதுகில் செல்லமாகத் தட்டிக் கொடுத்து அனுப்பினார் நடிகமணி, எதிரே இரண்டு கல்லூரி மாணவர்கள் வேகமாகப் பேசிக் கொண்டே வருகிறார்கள்.