பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : புகழ் என்னும் மாயை

1025

“செகண்ட் ஷோவுக்கு நேரமாச்சு; வேகமாக நட இப்பவே போனாத்தான், ‘க்யூ’விலே நின்னு டிக்கெட் வாங்கலாம்.”

“நாளைக்குப் பரீட்சையாச்சேடா! நீயானால் சினிமாவுக்கு வாடான்னு உசிரை வாங்கிறியே?”

“சரிதான் வாடா, சொல்கிறேன். உலகத்திலேயே இல்லாத பிரமாதமா இன்னிக்குத்தான் பரீட்சை புதுசா வருதா என்ன? நடிக மணி இந்தப் படத்திலே ‘ஏ ஒன்’ ஆக நடிச்சிருக்காண்டா! எல்லோரும் பிரமாதமாச் சொல்றாங்க!”

- அந்த இளைஞனுக்கு இருந்த உற்சாகத்திலே நடிக மணியை ஏக வசனத்திலே ஒருமையாகப் பேசிப் புகழ்ந்து கொண்டு போகிறான் அவன்.

நடிகமணி இதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டே மேலே நடந்தார். ஏதோ ஒரு கிராமத்திலிருந்து கொண்டு, நெற்றி வேர்வை நிலத்தில் விழப் பாடுபட்டு, அந்தப் பையனின் படிப்புக்காகச் சுளை சுளையாய்ப் பணம் அனுப்பிக் கொண்டிருக்கும் அவனது ஏழைத் தகப்பனின் முகத்தை நடிக மணி இப்போது தன் மனக்கண்களில் கற்பனை செய்ய முயன்றார். நெஞ்சின் மெல்லிய பரப்பில் முட்கள் பாய்வது போல் ஏதோ ஒரு வலி உண்டாயிற்று. ஒரு வேதனை கால் கொண்டது.

நடந்து நடந்து அமைதியான தெருக்களைக் கடந்து, கலகலப்பான ஒரு வீதிக்குள் புகுந்தார் அவர். தெருத் திருப்பத்தில் ஒளி மயமான மின் விளக்கு அலங்காரங்களோடு ஒரு சினிமாத் தியேட்டர்- அதில் அவர் நடித்த படம் நூறாம் நாள் விழாக் கொண்டாடி முடித்தும் இன்னும் கூட்டம் குறையாமல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. தியேட்டருக்கு எதிர்த்தாற் போல் அங்கே ஒரு பொதுப் பூங்கா அமைந்திருக்கிறது.

பூங்காவில் உள்ளே நுழைந்து கூட்டத்தோடு கூட்டமாகப் புல் தரையில் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டார் அவர். பின்புறம் யாரோ இரண்டு வயதான மனிதர்கள் பேசிக் கொள்ளும் உரையாடல் கேட்கிறது.

“என்ன ஐயா, ராமரத்னம்! எங்கே இந்த நேரத்திற்கு இப்படிப் பார்க்கில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்?”

“ஒய்ப் சினிமாவுக்குப் போயிருக்கிறாள். ஆட்டம் விட்டதும், இருந்து கூட்டிக் கொண்டு போகணும்! அதான் உட்கார்ந்து காத்துக் கொண்டிருக்கேன்…”

“ஏன் ஐயா நீயும் கூடப் போயிருக்கக்கூடாதோ?”

“தெரிந்தால்தானே சார் போகலாம்? சாயங்கலாம் ஆபிஸ் விட்டு வீட்டுக்கு வந்து பார்த்தால் பக்கத்து வீட்டிலே சாவியைக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறாள். ‘அடுப்பிலே பால் காய்ச்சி வைத்திருக்கிறது. டிகாக்ஷன் போட்டுக் காபி கலந்து கொள்வீர்களாம் - திரும்பக் கூட்டிக் கொண்டு வர ஒன்பதரை மணிக்குத் தியேட்டருக்கு வருவீர்களாம்’ என்று பக்கத்து வீட்டில் விவரம் சொல்லிச் சாவியைக் கொடுக்கிறார்கள்…”


நா.பா. II - 26