பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1026

நா.பார்த்தசாரதி சிறுகதைகள்

“சினிமாவில் அப்படி ஒரு பைத்தியமா?”

“இரைந்து கேட்காதீர் இந்தக் கேள்வியை! யார் காதிலாவது விழுந்தால் பிறகு உம்மைத்தான் பைத்தியம் என்பார்கள். முந்தா நாள் பக்கத்து வீட்டிலே ஒரு சங்கதி நடந்தது. பள்ளிக்கூடத்திலே பத்தாங் கிளாஸோ, என்னமோ படிக்கிற பையன் ஒருத்தன் அப்பா அம்மாவுக்குத் தெரியாமல், வெள்ளி டம்ளரை வீட்டிலிருந்து கிளப்பிக் கொண்டு போய் விற்று விட்டான். 'எதுக்குடா இப்படிச் செய்தே?’ என்று தகப்பனார் நாலு அறை வைத்துக் கேட்டபோது, ‘சினிமாவுக்குப் போகக் காசு இல்லே, டம்ளரை விற்றேன்’ என்றான் பயல்.”

“அந்தப் பையனாவது அப்படிச் செய்தான்! எங்கள் தெருவில் ஒரு பையன் மாதாமாதம் பள்ளிக்கூடச் சம்பளத்தைக் கட்டாமல் சினிமாவிற்குக் ‘க்யூ’வில் நின்று தகப்பனிடம் உதைபடுகிறான்.”

“இதெல்லாம் சினிமாவுடைய தப்பென்று சொல்ல முடியாது சார்! சினிமாவிலே எவ்வளவோ நல்ல அம்சம் எல்லாம் காட்டறாங்க. ‘நடிக மணி நாவுக்கரசன்’னு ஒருத்தர் படத்துக்குப் படம் அற்புதமாக நடித்திருக்காரு. நம்ம ஆளுங்கதான் கலையை ஒரு கட்டுப்பாட்டோடு இரசிக்கத் தெரியாமே தாறுமாறாகப் பைத்தியம் பிடிச்சுப் போயிடறாங்க” என்று முதலில் பேசிய இருவருக்கும் நடுவே வேறு ஒரு குரல் நுழைந்து சமாதானம் கூறுகிறது.

உட்கார்ந்து கேட்டுக் கொண்டே இருந்த நடிக மணிக்கு மனத்தை என்னமோ பண்ணுகிறது. கணவனை மறந்து சினிமாவுக்கு ஓடும் மனைவி, வெள்ளி டம்ளரை வெள்ளித் திரைக்காக விற்கும் பையன், பள்ளிச் சம்பளத்தைப் படம் பார்க்கச் செலவழிக்கும் சிறுவன் எல்லாரும் மனத்தில் தங்கி முள்ளாகக் குத்தினார்கள். அவ்வளவுக்கும் நடுவில் தன் நடிப்புத் திறமையைப் புகழ்ந்த மூன்றாம் மனிதரின் குரல் மனத்துக்குச் சிறிது ஆறுதலும் தந்தது அவருக்கு.

நடிகமணி பூங்காவிலிருந்து நடந்தார். திரைப்படக் கொட்டகை வாசலில் ‘க்யூ’வில் ஏதோ கலவரம். எல்லோருமாகச் சேர்ந்து கும்பலாகக் கூடிக் கொண்டு யாரோ ஒருவனை அடிக்கிறார்கள்: உதைக்கிறார்கள். அருகில் நெருங்கி விசாரித்ததில், யாரோ பிக்பாக்கெட் அடித்து விட்டானாம். அவனைத் தண்டிக்கிறார்களாம்.

சினிமாத் தியேட்டரிலிருந்து சிறிது தள்ளி ஒரு மரத்தடியில் கூலிக்காரிகள் போல் தோற்றமளித்த இரண்டு எளிய பெண்கள் பேசிக் கொண்டு நின்றார்கள்.

“என்னடி அங்கம்மா! உம் புருசன் வீட்டுக்கு இன்னிக்காச்சும் வந்தானா? கஞ்சி காய்ச்சக் காசு கொடுத்தானா?”

“அதையேன் கேட்குறே? என் தலையெழுத்து. கூலியை வாங்கிட்டு முதலாட்டத்துக்கு ஒரு படம். இரண்டாவது ஆட்டத்துக்கு இன்னொரு படம்னு அது பாட்டுக்குப் போயிடுது. நான் கெடந்து திண்டாடுகிறேன். குழந்தை குட்டிங்க எல்லாம் பட்டினி, வீடு நெனைவில்லாமே திரியுற மனுசனை என்னா.செய்யிறது?’