பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : புகழ் என்னும் மாயை

1027

“என்னமோ, காளியாத்தா பார்த்து உம் புருசனுக்கு நல்ல புத்தியைக் குடுக்கணும். கலியாணம் கட்டின நாளிலேருந்து நீயும் இந்தக் கஸ்டம்தான் படுறே…” இந்தப் பேச்சைக் கேட்டதும், பரட்டைத் தலையும், பீடிப் புகையுமாக ஒரே படத்துக்கு ஏழு தரம் நாலரையணா க்யூவில் நிற்கும் ஆண் முகம் ஒன்று நடிக மணியின் கற்பனைக் கண்களில் தோன்றுகிறது. கண்களில் நீர் மல்க, நெஞ்சு வேதனையால் துடிக்க, அந்தப் பஞ்சைப் பெண்ணை ஒரு கணம் நின்று பார்த்து விட்டு மேலே நடந்தார் நடிகமணி.

இன்னும் சிறிது தூரம் சென்றதும், ஐந்தாறு குடிசைகள் சேர்ந்தாற் போல் தெரிந்தன. அந்தக் குடிசைகளில் ஏதோ ஒன்றில் இருக்கும் சிறுமி ஒருத்தி, நடு வீதியில் நின்று யாரையோ எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். நடிகமணி கேட்கிறார்.

“இருட்டிலே ஏன் தனியா நின்னுக்கிட்ருக்கே, பாப்பா?”

“தனியா நிக்காமே வேறே என்னா செய்யிறது தாத்தா? நாயினா சினிமாவுக்குப் போயிடுச்சு. கஞ்சி காய்ச்சக் காசு குடுக்கலே, நாயினாவைத் தேடிக்கினு அம்மாவும் போயிடிச்சு. குடிசைலே வெளக்கு இல்லே. பயமாயிருக்கு. அங்கே குந்தியிருந்து அலுத்துப் போச்சு.”

“உங்க நாயினா என்னா வேலை செய்யிது?”

“கை வண்டி இழுக்குது.”

“உங்க நயினா தெனம் தெனம் சினிமாவுக்குப் போகுதே, உன்னை என்னிக்காச்சும் கூட்டிக்கிட்டுப் போயிருக்குதா?”

“நாயினா சம்பாரிக்கிற காசு, அது சினிமாவுக்குப் போறதுக்கே காணலியாம். என்னை எங்கே கூப்பிடப்போகுது? அம்மா சொல்லுது.”

“உன்னை நான் சினிமாவுக்குக் கூட்டிக்கிட்டுப் போறேன், வர்ரியா பாப்பா?”

“சினிமாக்கொண்ணும் நா வரலை.பசி வவுத்தைக் கிள்ளுது. அம்மாவை இன்னும் காணலியே தாத்தா?”

“எங்கூட வா ஒட்டல்லே சாப்பிடலாம்…”

குழந்தை கூச்சமோ, பிகுவோ இல்லாமல் நடிக மணியைப் பின் தொடர்கிறது. சினிமாத் தியேட்டர் அருகிலிருந்த ஓர் ஒட்டலுக்குக் கூட்டிக் கொண்டு போய்க் குழந்தைக்கு விதவிதமான பலகாரங்கள் வாங்கிக் கொடுக்கிறார் அவர். குழந்தை முகம் மலர்ந்து சாப்பிடுகிறது.

இன்னும் ஒரு பெரிய பலகாரப் பொட்டலத்தை வாங்கி, அதன் கையில் கொடுத்து, “வீட்டிலே போய் இதை உங்கம்மா கிட்டக் கொடுக்கணும்” என்று கூறி அழைத்துப் போகிறார்.

வீதியில் குடிசைகள் உள்ள இடம் அருகே வந்ததும், “நீ வீட்டுக்குப் போ, பாப்பா! நான் போய் வருகிறேன்” என்று நடிக மணி விலகிக் கொள்கிறார்.