பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1028

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

“நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்களே தாத்தா! எங்க நாயினாவுக்கு ரொம்பக் கோபம் வரும். பொல்லாதவரு. ‘கஞ்சி காச்சக் காசு தராமே இப்படிச் சினிமா சினிமான்னு அலையறிங்களே’ன்னு அம்மா கேட்டா, நாயினா அம்மாவை இழுத்துப் போட்டு அடிக்கும், உதைக்கும். அம்மா அழுவா; அம்மாவைப் பார்த்தா எனக்கும் பாவமா இருக்கும்.”

“இனிமே சினிமாவுக்குப் போகப்படாதுன்னு உங்க நாயினாவுக்கு நீ சொல்லேன்.”

“அம்மாடி! நான் சொன்னா, அது என்னையே அடிச்சுக் கொன்னுடும் தாத்தா! நாளைக்கி வேணா நீயே வந்து சொல்லேன் தாத்தா.”

“சரி; வந்து சொல்றேன் நீ வீட்டுக்குப் போ…!'

“கட்டாயம் வரணும் தாத்தா! நீங்க ரொம்ப நல்லவரு.” குழந்தை பலகாரப் பொட்டலத்தோடு குடிசைக்குள் போகிறது. நடிக மணி மேலே நடந்தார்.

அவர் மேலே ஏறி விடுகிறார் போல் ஒரு கார் மிக அருகில் வந்து நிற்கிறது. மேக் - அப் நிபுணர் சிரித்துக் கொண்டே ஸ்டுடியோ காரிலிருந்து கீழே இறங்குகிறார்.

“என்ன, உலகம் எப்படி இருக்கிறது?”

“நான் நினைத்துக் கொண்டிருந்த மாதிரி இல்லை.”

“நீங்கள் எதற்கு இந்த உலகத்தைப் பற்றி நினைக்கவேண்டும்? கலை உலகிற்கு நீங்கள்தான் முடி சூடா மன்னர். அந்த உலகைப் பற்றி மட்டும் நினையுங்கள் போதும். அங்கே உங்களுக்குப் புகழ்தான் உண்டு. இன்பம்தான் உண்டு, துன்பமே இல்லை”.

இதைக் கேட்டு விட்டு நடிக மணி நகைத்தார்.

“ஒவ்வொருவருடைய புகழுக்கும், எங்கோ பலர் துன்பப்பட வேண்டியிருக்கிறது. உயிருள்ள உலகத்தில் எத்தனையோ பிரச்னைகள். அதை மறந்து விட்டோ, மறைத்து விட்டோ கலை உலகில் நான் மட்டும் சுகமான தந்தக் கோபுர வாசியாக வாழ்வது நியாயமாகப் படவில்லை எனக்கு” ,

உள்ளம் உருகி நடிக மணி நாவுக்கரசு இவ்வாறு கூறி விட்டு நிதானமாகப் பெருமூச்சு விட்டார். அவருடைய ஞானோதயம் புரியாமல் மேக்-அப் நிபுணர் திகைத்தார்.

(1978-க்கு முன்)