பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/409

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : கடைசியாக ஓர் ஆண்பிள்ளை

1031

கடிதத்தைக் கூடச் சொந்தமாக எழுதாமல் ஏதோ சினிமாக் காதலில் வருகிற வசனம் போல் எழுதியிருந்தான். சொந்தமாக அவனுக்கு எதுவுமே தெரியாதோவென்று சாரதாவுக்குத் தோன்றியது. காதலைக் கூடப் பல திரைப்படங்களைப் பார்த்ததன் இமிடேஷனாக அவன் செய்து கொண்டிருப்பதாகப் பட்டதே ஒழிய, உணர்ந்து ஈடுபட்டதாகத் தெரியவில்லை. அவனுக்கு வெட்கம், மானம், ரோஷம் எதுவும் இருந்ததாகவும் தெரியவில்லை.

வேறொரு நாள் பஸ்ஸிலிருந்து கீழே இறங்கி அவளை அவன் பின் தொடர்ந்த போது, கோபத்தோடு தன் கால் செருப்பைக் கழற்றி அடிக்கப் போவதுபோல் காண்பித்தாள் அவள். சாரதாவின் அந்தச் செயல் கூட அவனை அவமானப்படுத்தவோ, எரிச்சலூட்டவோ செய்யவில்லை.

“கோபத்தில் கூட நீ அழகாயிருக்கிறாய். உன் பட்டுப் பாதங்களை நாள் தவறாமல் சுமக்கும் செருப்பு செய்த புண்ணியத்தைக் கூட நான் செய்யவில்லையா?” என்று புலம்பினானே ஒழியக் கோபப்படவில்லை. அவன் சரியான கல்லடிமங்கனாக இருந்தான். அவனை எரிச்சலூட்டவும் முடியவில்லை அவளால்.

ரோஷமில்லாதவனை, மான உணர்ச்சியில்லாதவனை, ஆண் பிள்ளையாகவே மதிக்கத் தோன்றவில்லை சாரதாவுக்கு. செருப்பைக் கழற்றிக் காண்பித்த மறுநாளிலிருந்து அவன் தன்னைப் பின்பற்றி வரமாட்டான் என்றே அவள் நினைத்திருந்தாள்.

ஆனால், அவள் நினைத்தபடி நடக்கவில்லை. மறுநாள் காலையில் பஸ்ஸிலும், திரும்பி வரும் போதும் அவன் தட்டுப்படவில்லை. என்றாலும், அவள் மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, தெரு முனையில் ஒரு கார் அவள் அருகே வந்து மெல்ல நின்றது. அவன்தான் ஓட்டிக் கொண்டு வந்திருந்தான்.

“மிஸ், ஏறிக்குங்க! உங்களை வீட்டிலே விட்டுடறேன்.”

அவள் அவன் வார்த்தைகளைக் காதில் போட்டுக் கொண்டதாகவே காண்பித்துக் கொள்ளவில்லை. விடுவிடுவென்று நடந்தாள். காரும் மெதுவாக அவளைத் தொடர்ந்தது.

அதிக பட்சம் வீட்டு வாசல் வரை பின் தொடர்வான். அதற்கு மேல் துணிய மாட்டான் என்றே சாரதா நினைத்தாள். ஆனால், அவள் ஸ்டோருக்குள் நுழைந்து தன் போர்ஷன் கதவைத் திறந்த போது, மற்ற ஐந்து போர்ஷன் ஆட்கள் பார்க்கும்படி உள்ளே வந்து, “இந்தாங்க, உங்களுக்காகவே வாங்கினேன்” என்று ஒரு மல்லிகைப் பூப் பொட்டலத்தை நீட்டினான் அவன். சாரதாவுக்குச் சர்வ நாடியும் ஒடுங்கினாற் போல ஆகிவிட்டது. . . .

பூப்பொட்டலத்தை வாங்காமலே “முட்டாள்! பண்பில்லாத ஜடமே!” என்று அவள் கூப்பாடு போடவே, மற்றப் போர்ஷன் வாசலில் நின்று பார்த்தவர்களின் கவனம் இன்னும் அதிகமாகவே இவர்களிடம் திரும்பியது.