பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/410

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1032

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

ஐந்து போர்ஷன்களில் இரண்டில் ஆண்கள் கூட ஆபீஸிலிருந்து திரும்பியிருந்தனர். எட்டியும் பார்த்தனர். ஆனால், சாரதாவின் உதவிக்கு யாரும் துணிந்து முன் வரவில்லை. என்னவென்று விசாரிக்கக் கூடப் பயப்பட்டார்கள்.

அவள் வாங்கிக் கொள்ளாமல் மறுக்கவே, பூப்பொட்டலத்தை வாசற்படியில் வைத்து விட்டுச் சினிமாக்களில் வருகிற மாதிரி முன் புறம் வலக்கையை நீட்டி, உள்ளங்கையை மறுபடி முகத்துக்குக் கொண்டு போய் முத்தம் கொடுக்கிறார் போல உதடுகளில் பதித்து விட்டு, விசிலடித்துப் பாடியபடியே திரும்பிப் போய் வாசற்படிக்கு நேரே நிறுத்தியிருந்த காரைக் கிளப்பிக் கொண்டு சென்று விட்டான் அவன்.

அவன் முயற்சி என்ன என்பதை எரிச்சலோடு புரிந்து கொண்டாள் அவள். அக்கம் பக்கத்தார் தன்னையும் அவனையும் சம்பந்தப்படுத்திப் பேசிக் கொள்ளச் செய்து விட வேண்டுமென்று ஆசைப்பட்டே இப்படி அவன் நடந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. -

ஆத்திரத்தோடு அவன் வைத்து விட்டுப் போன பூப்பொட்டலத்தை வாயிற்புறம் வீசி எறிந்தாள் அவள்.

இரவில் தந்தை வீட்டுக்கு வந்ததும், அழுது கொண்டே நடந்ததைச் சொன்னாள் சாரதா. அவன் ஓட்டிக் கொண்டு வந்த காரின் நம்பரையும் ஞாபகமாகக் குறித்துக் கொடுத்தாள்.

இரவு அகாலமென்றும் பாராமல், பக்கத்துப் போர்ஷனில் குடியிருந்த ஏ.ஜி. ஆஃபீஸ் கிளார்க் ஒருத்தரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கச் சென்றார் அனந்து. இப்போதே புகார் செய்து விட்டால் காலையில் சாரதா கல்லூரிக்குப் புறப்படும் போதே பஸ் நிறுத்தத்தில் வந்து அந்தப் பையனைப் போலீஸார் பிடிக்க முடியும் என்று அனந்து எண்ணியிருந்தார்.

போலீஸ் நிலையத்தில் புகார் செய்த போதும் அவ்வாறே காலையில் பஸ் நிறுத்தத்தில் வந்து கவனிப்பதாக அவர்கள் கூறினார்கள்.

போலீஸ் நிலையத்திலிருந்து திரும்பும் போது, “ஒய் அனந்து! இதை என்ன பண்ணியாவது நிறுத்தியாகணும். இப்படித் தினம் ஒரு பையன் பூவையும் வளையலையும் தூக்கிண்டு உம்ம பெண்ணைத் தேடிண்டு வந்தாm ஸ்டோர்லே மத்தக் குடித்தனக்காரர் ஒரு மாதிரி நினைக்க ஆரம்பிச்சுடுவா. தெருவிலேயும் பேர் கெட்டுப் போயிடும். தாறுமாறாகப் பேச்சுக்கள் வேற கிளம்பும்” என்று உடன் வந்தவர் அனந்துவை எச்சரித்தார்.

அனந்துவுக்கும் அது நியாயமென்றே பட்டது. எதிர் பார்த்தது போல் மறு நாள் காலையில் போலீஸ்காரர் ஒருவர் அனந்துவைத் தேடி வந்தார். வந்த போது அனந்து வீட்டில் இல்லை. முதல் நாள் போலீஸ் நிலையத்துக்கு உடன் சென்ற பக்கத்து போர்ஷன்காரர் இருந்தார். அவரைத் தனியே கூப்பிட்டுக் கொண்டு போய் இரண்டு நிமிஷம் பேசிய பின் அவரிடமே தேநீர் குடிக்கச் சில்லறையும் வாங்கிக் கொண்டு போய்ச் சேர்ந்தார் கான்ஸ்டபிள். அவர் பஸ் நிறுத்தத்துக்கே வரவில்லை.