பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : கடைசியாக ஓர் ஆண்பிள்ளை

1033

வழக்கமான தொல்லை தொடர்ந்தது. இளைஞன் வந்தான். பஸ்ஸில் ஜாடைமாடையான அர்த்தமுள்ள சில சினிமாப் பாடல்களைச் சாரதாவின் காதருகே முணுமுணுத்தான். “மெதுவா மெதுவாத் தொடலாமா?” என்று சீட்டியடித்துக் கொண்டே அவள் தோளைத் தொட்டான். பின்னலைப் பிடித்து இழுத்தான். அவளைச் சுற்றி நின்ற இளைஞர்களும் மாணவர்களைப் போல் தோன்றவே, பஸ்ஸிலிருந்த மற்றவர்கள் இதில் தலையிட்டுச் சண்டையை விலைக்கு வாங்கப் பயந்தார்கள். பேசாமல் இருந்தார்கள்.

சாரதாவுக்கு நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போலிருந்தது. இருபதாம் நூற்றாண்டில் இராமாயணம் நடந்தால் ,சீதையைப் பறி கொடுத்த இராமர்கள் எல்லாம் இராவணன் மேல் போலீஸில் புகார் கொடுத்து விட்டு அப்புறம் சும்மா இருந்து விடுவார்கள் போல் தோன்றியது. போலீஸ் விசாரிக்க வருவதற்குள் இராமனும் கிழவனாகி விடுவான், சீதையும் கிழவியாகி விடுவாள். உடனடியாகக் கோபம் கொண்டு பொங்கியெழ வேண்டிய விஷயங்களில் எல்லாம் கையாலாகாமல் சோர்ந்து உட்கார்ந்து விடும் ஆண் பிள்ளைகளை ஆண்களாகவே சாரதா நினைக்கவில்லை.

‘புதுமணத் தம்பதிகளிடம் கடற்கரையில் நகைகள் கொள்ளை. கணவனும், இளம் மனைவியும் இரவு கடற்கரையில் தனியே உலாவச் சென்ற போது ரெளடி ஒருவன் கணவனிடம் பேனாக் கத்தியைக் காட்டி மிரட்டி, மனைவியின் நகையை அவனே கழற்றித் தருமாறு செய்த திருட்டு. கணவன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் புலன் விசாரித்து வருகிறது’ என்பன போன்ற தினசரிப் பத்திரிகைச் செய்திகளைப் படிக்கும் போது எல்லாம், “கேவலம் ஒரு ரெளடியின் பேனாக் கத்தியிலிருந்து மனைவியைக் காக்க தோள் வலியில்லாத ஓர் ஆண் பிள்ளையா வாழ்நாள் முழுவதும் அவளைக் கட்டிக் காக்கப் போகிறான்? இன்றைக்கு முக்கால்வாசி ஆண் பிள்ளைகள் ஆண்களைப்போல் தோன்றுகிறார்களே ஒழிய, ஆண்மையுள்ளவர்களாக இல்லேடி! ஆண்களைப் போல தோன்றுகிறவர்கள் எல்லாம் ஆண்மையுள்ளவங்க இல்லை. இது மாதிரி செய்ததிலேருந்து நாம. அதைத்தான் தெரிஞ்சுக்கணும்” என்று தன் தோழிகளிடம் சொல்லி விமரிசித்திருக்கிறாள் சாரதா. முதல் நாளிரவே அப்பாவும், பக்கத்து போர்ஷன்காரரும் போலீஸில் புகார் செய்திருந்தும் அவர்கள் இன்றும் வராதது அவளுக்கு எரிச்சலூட்டியது. பொறுமை இழக்கச் செய்தது.

மாலையில் வீடு திரும்பியதுமே போலீஸ் வராததன் மர்மம் அவளுக்குப் புரிந்தது.

“நீ குடுத்த கார் நம்பரை வச்சு விசாரித்ததுலே, அந்தப் பையன் ஐ.ஜியோட தங்கை புள்ளைன்னும், அவன் ஐ.ஜி. வீட்டிலேயே தங்கி, மாநிலக் கல்லூரியிலே படிக்கறான்னும் தெரிஞ்சிருக்கு. அதுனாலேதான் போலீஸ்காரர் தயங்கறா அம்மா” என்று பக்கத்துப் போர்ஷன்காரர் சாரதாவுக்குத் தகவல் சொன்னார்.

“பையன் பேரு தங்கப்பாண்டியன். முன்னாலேயும் இது மாதிரி இரண்டு மூணு புகார்கள் வந்து மேலே இருந்து ‘பிரஷர்’ வந்ததாலே ஒண்ணும் பண்ணாமே சும்மா