பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1036

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

பொண்ணைப் பெரிய பெரிய பணக்காரப் பையன்களோட பழக விட்டுட்டான். அதுனாலே வந்த வம்புதான் இதெல்லாம். இப்பக் குறைப்பட்டுண்டா, அதுக்கு யார் என்ன பண்ண முடியும்” என்று ரகசியமாகத் தம் மனைவியிடம் கூறினார், பக்கத்துப் போர்ஷனைச் சேர்ந்த சமஷ்டி உபநயன தர்மப் புகழ் போஸ்ட் மாஸ்டர்.

இப்படிச் சாரதாவால் வெறுக்கப்பட்டும், சாரதாவைப் பாதிக்காமலுமே அவளுக்கு எல்லா விதத்திலும் கெட்டபெயரை உண்டாக்கி விட்டான், அந்த ரெளடிப் பையன்.

கொதிக்கும் எண்ணெய் பட்டு உண்டான தீப்புண்களை விட இந்த மனப்புண் அனந்துவை வாட்டியது.

நாலைந்து நாள் கழித்து ஒரு மாலை வேளையில் முன்பு அவரை டாக்ஸியில் வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டுப் போன அதே சக ஊழியன் அவர் எப்படி இருக்கிறார் என்று பார்த்து நலன் விசாரித்து விட்டுப் போக வந்த போது, அனந்து கண்களிலிருந்து மாலை மாலையாக நீர் வடிய மெளனமாக அழுது கொண்டிருந்தார்.

“ஏன் மாமா அழறேள்?”

“வாடா ராஜு! நான் பொறந்த பொறப்பை நெனைச்சு அழறேன். காண்டீனெல்லாம் எப்படி இருக்கு? சரக்கெல்லாம் யார்போடறா?” என்று கண்ணில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டு அவனை வரவேற்றார் அனந்து.

“அதெல்லாம் அப்புறம் சொல்றேன் மாமா! நீங்க ஏன் இப்போ அழுதுண்டிருக்கேள்னு மனசிலே உள்ளதை மறைக்காமே நிஜத்தை எங்கிட்டச் சொல்லணும், பொய் சொல்லப்படாது.”

அனந்து சிறிது தயங்கிய பின் உண்மையை விவரித்தார். முதலில் அவர் தயங்கியதற்குக் காரணம், ஒரு காண்டீனில் தனக்குக் கீழ்ப்பட்டவனாக மாவரைக்கிற உத்தியோகம் பார்க்கும் எழுதப் படிக்கத் தெரியாதவனான ஒருத்தனிடம் நாகுக்கான தன் குடும்ப அந்தரங்கத்தைச் சொல்வதா, வேண்டாமா என்று எண்ணியதுதான். அவர் அதைச் சொல்லி முடிக்கவும், காய்கறிக் கடைக்குப் போயிருந்த சாரதா திரும்பி வரவும் சரியாயிருந்தது.

“சாரதா, இவன் ராஜு! எங்ககூட வேலை பார்க்கிறான். சொந்த ஊர் மானாமதுரை. மாவரைக்கிறதிலே நிபுணன், அன்னிக்கி என்னைக் கொண்டு வந்து விட்டப்போ அவசரத்திலே நான் உனக்கு இவனைப் பத்திச் சொல்லலே. இவனுக்கு ஒரு காபி கலந்து குடு” என்றார் அனந்து.

சாரதா அவனைப் பார்த்தாள். ஆள் ஒற்றை நாடியாக, ஊதினால் விழுந்து விடுகிற மாதிரி இருந்தான். ஆனால், நல்ல உயரம். உழைத்து இறுகி, உரம் பாய்ந்த தோள்கள். தோளில் சமையல் கைக்காரியத்துக்குப் பயன்படுகிற மாதிரி பிடி துணியையே துண்டாகப் போட்டுக் கொண்டிருந்தான். அழுக்குப்பனியன். அழுக்கு வேஷ்டி. ஆளே நல்ல கறுப்பு. கறுப்பு முகத்தில் இடுங்கிப் போய் மின்னும் ஒளி மிக்கக் கண்கள். எந்த