பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : கடைசியாக ஓர் ஆண்பிள்ளை

1037

ஊரிலும், எந்த வீட்டிலும் எவ்வளவு உயரமான நிலைப்படியும் நிச்சயம் இவன் நிமிர்ந்தால் இடிக்கும் என்பது போல் அத்தனை உயரம். கறுத்த உதடுகளும், மூக்கும், வசிகரமற்ற முகமுமாக இருந்தான் அவன். சிரித்தால் மட்டும் தேங்காய்ச் சில்லு மாதிரி வெள்ளை வெளேரென்று பற்கள் மின்னின. அப்பாவின் அறிமுகத்தை ஏற்பது போல் அவனை நோக்கிக் கை கூப்பி விட்டுக் காபி கலப்பதற்காகச் சமையற்கட்டுக்குள் சென்றாள் சாரதா, அப்போது வாசலில் வெறுப்பூட்டும் குரல் கேட்டது.

“ஹல்லோ மை டியர் சாரதா!” என்ற அழைப்பைத் தொடர்ந்து சினிமாப்பாடல்: ‘உன்னை நான் சந்திப்பேன் என்னை நீ கொஞ்சிவிட்டால்...’ என்று பாதியில் நின்றது. சீட்டியடிக்கிற ஒலி தொடர்ந்தது.

“இவன்தாண்டா ராஜு! நாள் தவறாமே வந்து மானத்தை வாங்கறான். யாரோ பெரிய போலீஸ் ஆபீஸருக்கு உறவாம். அதனாலே எல்லாரும் பயப்படறா. கோயில் காளை மாதிரி பொம்பளைகள் பின்னால் ஒவ்வொரு திறந்த விடா நுழைஞ்சிடுவான் போலிருக்கு”

“சித்தே இருங்கோ மாமா, வரேன்” ராஜு வெளியே போக எழுந்திருந்தான்.

“உனக்கெதுக்குடா வந்த இடத்திலே வம்பு? பேசாமே உக்காரு”

“நான் ராமநாதபுரம் ஜில்லாக்காரன் மாமா! கண்ணெதிரே நடக்கிற அக்கிரமத்தைப் பார்த்துண்டு கையைக் கட்டிண்டு ஆம்புள்ளையா நின்னுண்டிருக்க என்னாலே முடியாது.”

அவன் அவர் தடுத்ததையும் மீறி வெளியே பாய்ந்தான்.

அடுத்த நிமிஷம் என்ன நடக்கிறது என்பதை அனந்து உள்ளிருந்தே கேட்கவும் அனுமானிக்கவும் முடிந்தது. ராஜுவின் குரல்தான் முதலில் விசாரித்தது. .

“நீங்க யாரு சார்? உங்களுக்கு என்ன வேணும் இங்கே?”

“நானா? நான் சாரதாவின் ஆருயிர்க் காதலன்.”

இதற்கப்புறம் உரையாடல் இல்லை. பளீரென்று ஓர் அறை விழுகிற ஒசை கேட்கிறது.

“டேய் என்னையா அறையறே? நான் யார் தெரியுமா?”

“தெரியுமே பொம்பளைப் பொறுக்கிகளிலே ஒருத்தன். போடா! உனக்குப் பெருமை ஒரு கேடு.”

இன்னொரு பலமான அடி விழுகிறது.”நீங்க யாராயிருந்தாலும், தெருவிலே போய் அடிச்சுக்குங்கோ. இங்கே சண்டைகூடாது. இது கெளரவமா நாலு பேர் குடியிருக்கிற இடம்.” இப்படிக் குறுக்கிட்டது சமஷ்டி உபநயன தர்ம போஸ்ட் மாஸ்டரின் குரல்.

“சும்மா வாயை மூடுங்க சார். உங்க கெளரவந்தான் நல்லாத் தெரியுதே. வீட்டோட இருக்கிற பொம்பிளையைத் தேடி வந்து எவனோ ஒரு கிறுக்கன், நாள் தவறாம வம்பு பண்றதைப் பார்த்துக்கிட்டுப் பொறுமையா இருக்கிற கெளரவத்தையேதான் சொல்றேன் சார்!” இது அவரைச் சாடும் ராஜுவின் குரல்.