பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1038

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

அனந்துவால் எழுந்திருந்து நடமாட முடியாத நிலை. ஓடிப் போய் ராஜுவைத் தடுக்க முடியவில்லை அவரால். படுத்த இடத்திலிருந்தே, “ராஜூ” என்று பலங்கொண்ட மட்டும் அவர் கத்தினார். ஆனால், ராஜூ அப்போது அதைக் காதில் வாங்கும் நிலையில் இல்லை. தெருவில் நிறுத்தியிருந்த தன் காரை நோக்கி ஓடத் தொடங்கியிருந்த காதல் ரெளடியைத் துரத்திப் போய் பிடித்து மேலும் உதைத்துத் கொண்டிருந்தான் அவன்.

பத்து நிமிஷத்தில் கார் சர்ரென்று சீறிக் கொண்டு கிளம்பும் ஓசையும், “போடா ராஸ்கல்! இனிமே இந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தியோ, தொலைச்சுப்பிடுவேன் தொலைச்சு. சொந்த அக்கா தங்கையோட பிறந்ததில்லையாடா நீ?” என்று ராஜு அவனை எச்சரித்து அனுப்பும் ஓசையும் உள்ளே படுத்திருந்த அனந்துவுக்குக் கேட்டன.

ராஜு உள்ளே திரும்பி வந்த போது, சாரதா காபி கலந்து கொண்டு வந்திருந்தாள்.

“வந்த இடத்திலே ஏண்டா வம்பை விலைக்கு வாங்கினே? காப்பியைக் குடிச்சிட்டு எங்கேயாவது ஓடிப் போயிடு. அவன் போய்ப் போலீஸோடவரப் போறான்” என்றார் அனந்து.

“ஓடிப் போறது எதுக்கு மாமா? கோழைன்னா பயந்து ஓடிப் போவான். நான் ஏன் போகணும்? போலீஸ் வரட்டுமே? வந்தா என்ன? நடந்தைச் சொல்றேன். கேக்கலேன்னா ஜெயிலுக்கு உள்ளே போறேன். நீங்க என் சம்பளத்தை வாங்கி, எனக்காக ஒரு வக்கீல் வச்சு வாதாடுவேளா இல்லியா? சொல்லுங்கோ?”

“சாரதா, முதல்லே அவனுக்குக் காப்பியைக் கொடு சொல்றேன்!” சாரதா காப்பியைக் கொடுத்தாள். ராஜூ அதை வாங்கிப் பருகி முடிக்கவும், வாசலில் போலீஸ் ஜீப் வந்து நிற்கவும் சரியாயிருந்தது.

‘அஸால்ட் அண்ட் அட்டெம்டட் ஃபார் மர்டர்’ என்று எஃப் ஐ ஆர் தயாரித்து அவனை இழுத்துச் சென்றார்கள் போலீஸார். அவன் புன்முறுவலுடன் நடந்து போனான். .

காபி டவரா டம்ளருடன் தெரு வாசல் வரை அவனை வழியனுப்ப வந்த சாரதா முதல் முதலாக முழுப் பெளருஷம் நிறைந்த ஓர் பூரண ஆண்மகனுக்குத் தன் கையால் காபி கலந்து கொடுத்த பெருமையோடு கண்களில் நீர் மல்க நின்றாள்.

பட்டினத்தில் ஆண்கள் குறைவாகவும், ஆண்களைப் போல் தோன்றுபவர்கள் அதிகமாகவும் இருந்தார்கள் என்ற அவளது நெடுநாளைய மனத்தாங்கல் இன்று ஒரு சிறிது குறைந்திருந்தது. கடைசியாக அவள் ஓர் ஆண்பிள்ளையைப் பார்த்து அவனுக்குத் தன் கைகளால் காபியும் கலந்து கொடுத்திருந்தாள்.

அவன் அழகாக இல்லைதான். ஆனால், நிச்சயமான ஆண் பிள்ளையாக இருந்தான். ஜாமீன் கேட்டு அவனை விடுவிக்க வக்கீலைத் தேடிச் செல்வதற்கு அப்பாவிடம் யோசனை கேட்பதற்காக உள்ளே விரைந்தாள் சாரதா.

(கலைமகள், தீபாவளி மலர், 1978)