பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/418

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1040

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

பரங்கிமலையில் பழைய நாளில் ‘ஒயின் ஸ்டாக்’ செய்கிற ஸெல்லர் கிடங்காக இருந்து சிதிலமடைந்து சுவர்களில் அரசும் ஆலும் முளைக்கத் தொடங்கியிருந்த கட்டிடம் ஒன்று மிஸஸ் மாத்யூவின் கண்ணில் பட்டது. கட்டிடத்தைச் சுற்றித் தோட்டத்திற்கும் விளையாட்டு மைதானத்திற்கும் பயன்படுத்த ஏற்றபடிநிறையக் காலி இடம் புதர் மண்டிக் கிடந்தது.

மிஸஸ் மாத்யூ கட்டிடத்திற்குச் சொந்தக்காரரைத் தேடிப் பிடித்து விசாரித்ததில், “அது உபயோகப்படாதும்மா. ரொம்பப் பழசாப் போச்சு. சீக்கிரமே அதை இடிச்சுப் போட்டு காலி மனையைப் பிளாட் பண்ணி வித்துடலாம்னு இருக்கேன். நீங்க வேறு இடம் பாருங்க” என்று அவரிடமிருந்து பதில் வந்தது.

ஆனால், மிஸஸ் மாத்யூவா விடுகிறவள்? "ஒரு வருஷத்துக்கு மட்டும் வாடகைக்கு விடுங்கோ. புதரை வெட்டிச் செதுக்கிக் கட்டிடத்தை உபயோகத்துக்கு ஏத்ததா நானே பண்ணிக்கறேன். நல்ல காரியத்துக்காக நான் கேட்கிறேன். அங்கே ஒரு நர்ஸரி ஸ்கூல் போடலாம்னு உத்தேசம் மறுத்துச் சொல்லக்கூடாது நீங்க.”

சுவர்களும், விதானமும் ஈரம் பாய்ந்து உப்புப் பரிந்து உளுத்துப் போன அந்தக் கட்டிடத்தை ‘டெமாலிஷ்’ பண்ண இருந்த சமயத்தில், அதற்கு இப்படி ஒரு யோகம் அடிக்கும் என்று வீட்டுக்கு உரியவர் எதிர்பார்க்கவே இல்லை. கிடைத்த மட்டில் லாபம் என்று சம்மதித்து, மாதம் ஐநூறு ரூபாய் வாடகையும், மூன்று மாத அட்வான்ஸும் கேட்டார் வீட்டுக்காரர். மிஸஸ் மாத்யூ உடனே ஒப்புக் கொண்டாள். மூன்று மாத அட்வான்ஸ் கொடுத்து, ஒப்பந்தமும் செய்து கொண்டாள். மார்ச் மாதம் முழுவதும் அந்தப் பாழடைந்த கட்டித்தைச் செப்பனிடும் பணிக்குச் சரியாகப் போய் விட்டது.

மிஸஸ் மாத்யூவின் கருத்துப்படி ஐநூறு ரூபாய் அந்த இடத்திற்கு மிக மிகக் குறைவு. நர்ஸரி, எல்.கே.ஜி, யூ.கே.ஜி. மூன்று வகுப்புக்களிலும் இரண்டு இரண்டு செக்‌ஷன்கள் வீதம் நடத்துவதற்குப் போதுமான இடம் அந்தக் கட்டித்தில் இருந்தது. இது தவிர ஆபீஸ் ரூமுக்கும், மாடியில் இடம் கிடைக்குமென்று தோன்றியது.

பழைய நாளில் ஒயின் ஸ்டாக் செய்வதற்காக பேஸ்மெண்ட்டில் ஒரு பெரிய ஹால் பாதாளக் கூடமாகப் பூமி மட்டத்திற்கு அடியில் இருந்தது. அதற்கு அப்புறம் முதல் ஃப்ளோரின் கூடம், மாடி என்று மூன்று இடங்கள் ஆகிவிட்டன. மிஸஸ் மாத்யூவுக்கு ஒரே கொண்டாட்டம். நடுவே ஒரு கீற்றுத் தட்டி வைத்து மறித்தால் மூன்று, இடத்திலுமாக ஆறு கிளாஸ் ரூம்கள் கிடைத்துவிடும்.

பாழடைந்து போய்ப் புதர் மண்டி, இன்றோ நாளையோ இடிந்து விழப் போகிறது என்ற நிலையிலிருந்த கட்டிடத்தை முப்பதே நாளில் மயன் மாளிகை போல் வெளிப்பூச்சால் மாற்றியிருந்தாள் மிஸஸ் மாத்யூ. விளையாட்டுமைதானத்திற்கு இடம் விட்டது தவிர மீதி இடங்களில் அழகான தோட்டம் போட்டிருந்தாள். பசுமை கொழிக்கும் நல்ல செழிப்பான மண், அதிக நாள் எதுவும் பயிரிடப்படாமல் கிடந்த கன்னி நிலமாகையினால் எல்லாம் நன்றாகக் கொழித்து வளர்ந்தன. பூங்கா, காய்கறி, செடி கொடிகள் எல்லாமே நன்றாக வளர்ந்திருந்தன.