பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : பூக்களை யாரும் மிதிக்கக் கூடாது

1041

‘நியூ ஃபீல்டு நர்ஸரி ஸ்கூல்’ என்று அழகாகக் கட்டிடத்தின் நான்கு பக்கங்களிலும் பெரிய பெரிய போர்டுகள் எழுதி மாட்டப்பட்டிருந்தன. கட்டிடத்தின் அருகே புதிதாக விரைந்து வளர்ந்து பூவும், பசுமையுமாக உருவான பூங்கா அதற்குத் தனி அழகைக் கொடுத்தது. வந்து பார்த்த போது வீட்டுக்காரருக்கே அது தன் பழைய கட்டிடம்தானா என்று பிரமிப்பு ஏற்படும்படி மேல் பூச்சால் அதை மாற்றியிருந்தாள் மிஸஸ் மாத்யூ. ஆசிரியைகளுக்காக விளம்பரம் கொடுக்கப்பட்டதும், ஆயிரக்கணக்கில் அப்ளிகேஷன்கள் குவிந்தன. பி.ஏ.யும், எம்.ஏ.யும் பி.எட்டும், எம்.எட்டும் படித்து விட்டு, வேலை கிடைக்காமல் வீட்டில் அடைந்து கிடந்த பெண்கள் எல்லாரும் விண்ணப்பித்திருந்தார்கள். முறையான பள்ளிக்கூடங்களுக்கோ, அரசாங்கப் பள்ளிக்கூடங்களுக்கோ போனால் பயிற்சி, முன் அனுபவம், அதிகத் தகுதி என்றெல்லாம் கேட்டுத் தொந்தரவு செய்த காரணத்தால், அந்தத் தொந்தரவெல்லாம் இல்லாத இம்மாதிரித் தனியார் பள்ளிக்கூடங்களில் கைச்செலவுக்குக் கிடைத்தது போதும் என்று பலர் வேலைக்கு வந்தார்கள். சிலர் இந்த வேலைக்கே மிஸஸ் மாத்யூவுக்கு ஏதாவது லஞ்சம் கொடுத்துக் கூட வரத் தயாராயிருந்தார்கள். வாங்குபவருக்கு அப்படி எண்ணமே கூட இல்லாத சமயத்தில் கொடுப்பவரால் ஆசையூட்டப்பட்டுத்தான் முக்கால்வாசி லஞ்சங்கள் இந்த தேசத்தில் தொடங்குகின்றன. வாங்குபவர் கேட்டு வற்புறுத்தும் லஞ்சத்தை விட,"ஏதாவது பணம் கிணம் ஆகும்னாலும் தந்துடறேன். காரியத்தை முடிச்சுக் குடுங்க, போதும்” என்று கொடுப்பவர் முந்திக் கொண்டு சரணாகதியாகும் தேசத்தில் லஞ்சம் மரபாகவும், சம்பிரதாயமாகவும் ஆவதைத் தவிர வேறு வழியில்லை. அப்படி ஆகியும் இருந்தது.

இங்கே மிஸஸ் மாத்யூவிடம் ஆசிரியை வேலைக்காக அப்படிச் சரணாகதியடைந்தவர்கள் பலர் இருந்தனர். மொத்தம் ஆறே ஆறு பேரைத்தான் அவள் ஆசிரியைகளாகத் தேர்ந்தெடுத்தாள். தன்னையும் சேர்த்து ஏழு பேர் என்று வைத்துக்கொண்டாள்.

மாதம் முன்னூறு ரூபாய் சம்பளம் என்று ஆர்டர் கொடுக்கப்பட்டிருப்பவர்களுக்கு 75 ரூபாயும், நானூறு ரூபாய் சம்பளம் என்று ஆர்டர் கொடுக்கப்பட்டிருப்பவர்களுக்கு 100 ரூபாயும்தான் கைக்கு வரும் என்றும், ஆனால், அவர்கள் முந்நூறு ரூபாய்க்கும், நானூறு ரூபாய்க்கும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாக வேண்டுமென்றும் முதலிலேயே சொல்லியாயிற்று; அவர்களும் அதற்குச் சம்மதித்தாயிற்று.

மிஸஸ் மாத்யூவின் தம்பி ஒருவன் ஊரில் வேலையில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தான். அவனை வரவழைத்து ‘நியூ பீல்டு நர்சரி’ ஸ்கூல் மானேஜர் என்று. நியமித்தாயிற்று. காஷியர், கிளார்க், சமயா சமயங்களில் ப்யூன் எல்லாம் அவன் தான். ‘ஸ்கூல் வேன்’ என்ற பெயரில் வாங்கியிருந்த ஓர் ஓட்டை டீஸல் வாகனத்தைச் செலுத்திப் போய்க் குழந்தைகளை அழைத்து வருகிற டிரைவரும் அவன்தான். மிஸ்டர் மாத்யூவுக்குப் பப்ளிக் ரிலேஷன்ஸ் ஆஃபிசர் என்றொரு நர்சரி பள்ளிக்குத்
நா.பா. II - 27