பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/420

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1042

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

தேவையில்லாத உத்தியோகம். தோட்ட வேலையையும், வாட்ச்மேன் உத்தியோகத்தையும் சேர்த்துப் பார்ப்பதற்கு ஒரு வேலைக்காரனும் போடப்பட்டிருந்தான்.

அட்மிஷன் மிஸஸ் மாத்யூ எதிர்பார்த்ததை விடப் பிரமாதமாக இருந்தது. கிட்டத்தட்ட ஐநூறு குழந்தைகளுக்கு மேல் சேர்ந்து விட்டார்கள். குழந்தைகளுக்கு ரூ.30, ரூ.40, ரூ.50 என்று வகுப்புக்கு ஏற்றபடி சம்பளம் நிர்ணயித்தாள். அட்மிஷனின் போது ரசீது கொடுக்காமல் ‘பில்டிங் ஃபண்ட்’ என்று ஒவ்வொரு பெற்றோரிடமும் ஒரு நூறு ரூபாய் நன்கொடையும் வற்புறுத்தி வாங்கினார்கள். ஸ்கூல் வேனில் வருகிற குழந்தைகளுக்கு ‘வேன்’ கட்டணம் ரூ.20 என்று நிர்ணயித்தாள். ஸ்கூலில் டெலிவிஷன் வாங்குவதற்காக என்று தலைக்கு ஐந்து ரூபாய் விதம் குழந்தைகளிடம் கட்டாயமாக வசூலித்தார்கள். இப்படியே ஒரு ரேடியோ ஸெட்டுக்கும் வசூல் நடந்தது. - z

“பள்ளிக்கூடம் நடக்கிற நேரத்தில் டெலிவிஷனில் ஒரு புரோகிராமும் கிடையாதே?” என்று கொஞ்சம் விழிப்பு உணர்ச்சியுள்ள ஒரு தந்தை கேட்ட போது, “சம்மதமானால் இங்கே சேருங்கள். இல்லாவிட்டால் வேறு ஸ்கூல் பார்த்துக் கொண்டு போங்கள்” என்று முகத்திலறைந்தாற் போல் பதில் சொன்னாள் மிஸஸ் மாத்யூ. மெடிகல் ஃபீஸ், ஸ்பெஷல்ஃபீஸ், அது இது என்று ஒரு குழந்தையின் அட்மிஷனுக்குக் கிட்டத்தட்ட நூறு முதல் நூற்றியிருபது ரூபாய் வரை ஆயிற்று. தினசரி ஒரு நிமிஷம், அரை நிமிஷம் லேட்டாய் வருகிற குழந்தையிடம் கூடலேட் ஃபைன் என்று எட்டணா வசூலிக்கப்பட்டது.

‘அம்மாடி காலேஜ் ஃபீஸை விட அதிகமாயிருக்குதே’ என்று குறைப்பட்டுக் கொண்டேயாவது பணத்தைக் கட்டிக் குழந்தையை நியூ ஃபீல்டு நர்ஸ்ரி ஸ்கூலில் சேர்த்தார்களே ஒழிய, ஒரு பெற்றோராவது மிஸஸ் மாத்யூவிடம் முறைத்துக் கொண்டு திரும்பிப் போய் விடவில்லை. கிராக்கி அதிகமாக, அதிகமாக மிஸஸ் மாத்யூ ஓர் அட்டை இரத்தத்தை உறிஞ்சுவது போல் பெற்றோர்களிடம் பணத்தை உறிஞ்சினாள்.

நியூ ஃபீல்டு நர்ஸ்ரி ஸ்கூலின் பரீட்சையில் பெரும்பாலான குழந்தைகளுக்கு மார்க்கைக் குறைத்துப் போட்டு, அப்படிக் குறைந்த மார்க் வாங்கிய குழந்தைகளுக்கு எல்லாம் காலையில் ஸ்கூல் தொடங்குவதற்கு முன்போ அல்லது மாலையில் ஸ்கூல் விட்ட பிறகோ ஸ்கூலிலுள்ள டீச்சர்களே ‘ஸ்பெஷல் கோச்சிங்’ அல்லது டியூஷன் சொல்லிக் கொடுப்பார்கள் என்றும் அதற்குத் தனியே பதினைந்து ரூபாய் கட்டி விட வேண்டுமென்றும் மிஸஸ் மாத்யூ ஏற்பாடு செய்தாள். அந்தப் பதினைந்து ரூபாயில் பத்து ரூபாயைத் தான் எடுத்துக் கொண்டு, ஐந்து ரூபாயை டியூஷன் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியைகளுக்குத் தந்தாள்.

முதல் இல்லாத ஒரு வியாபாரமாக அந்த நியூ ஃபீல்டு நர்ஸ்ரி ஸ்கூல் நடந்து கொள்ளை லாபம் தரத் தொடங்கியிருந்தது. முதல் வருஷம் முடிவதற்குள்ளேயே சுமார் நாற்பதினாயிரம் ரூபாய் வரை ஸ்கூலிலிருந்து வந்த வருமானம் மிஸஸ் மாத்யூவின் பெயரில் ‘டெபாசிட்’ ஆகி பாங்கில் பத்திரமாக இருந்தது.