பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/421

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : பூக்களை யாரும் மிதிக்கக் கூடாது

1043

இரண்டாவது வருஷம் வந்தது. பூமிக்கு அடியிலிருந்த நிலவறையில் மின் விளக்கு, மின் விசிறி எல்லாம் போட்டு இரண்டாகத் தடுத்து, நர்ஸரி வகுப்புக்கள் நடந்தன. முதல் ஃப்ளோரில் எல்.கே.ஜி. மாடியில் யூ.கே.ஜி. என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஹாலும், பல வகுப்புக்களாகத் தடுக்கப்பட்டிருந்தன.

பணம் பண்ணுவதில் மிஸஸ் மாத்யூவின் நிபுணத்துவம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருந்தது. பக்கத்தில் ஒரு ஜவுளிக் கடையில் ஒரு குறிப்பிட்ட நீல நிறத்துக் கனரகத் துணி ரொம்ப நாளாக விற்காமல் ஸ்டாக் கிடந்து தேங்கியிருந்தது. ‘நியூ ஃபீல்டு நர்ஸரி’ ஸ்கூலில், எல்லாக் குழந்தைகளுக்கும் அந்த நீலநிறக் காக்கித் துணியை யூனிஃபார்ம் துணியாக அறிவித்து, அந்தத் துணியையும் அதே கடையில் வாங்கச் சொல்லி ஏற்பாடு பண்ணினால், மிஸஸ் மாத்யூவுக்கு இரண்டாயிரம் ரூபாய் தருவதாக அந்தக் கடைக்காரனே வந்து ஆசை காட்டினான்.

மூவாயிரம் தந்தால் அப்படியே செய்வதாக மிஸஸ் மாத்யூ பேரம் பேசினாள். கடைக்காரன் மறு பேச்சுப் பேசாமல் மூவாயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்து விட்டான். முந்தின வருஷத்து ப்ரெளன் யூனிஃபாரத்துக்கு ஏற்பப் பழுப்புநிற ஷூ போட்டுக் கொள்ளச் சொல்லியிருந்தார்கள். “இந்த வருஷம் ப்ளு யூனிஃபாரத்துக்குக் கறுப்பு நிற ஷூவை அத்தனை குழந்தைகளும் உங்கள் கடையிலேயே வாங்கச் செய்கிறோம். ஸ்கூலுக்கு இரண்டாயிரம் ரூபாய் டொனேஷன் தர முடியுமா?” என்று பக்கத்தில் இருந்த ஷகு மார்ட்டுக்கு மிஸஸ் மாத்யூவே சொல்லி அனுப்பினாள். ஷூமார்ட் ‘ஓனர்’ வந்தான். குறிப்பிட்ட ஷூ மார்ட் ஒனரும் ஒரு விடாக்கண்டன் ஆகையால் கறாராக ரூ. 1800க்குப் பேரம் பேசிக் கொடுத்துவிட்டுப் போனான். நோட் புக், புத்தகங்களில் கூட இதே மாதிரி கமிஷன் வந்தது.

இரண்டாம் வருஷம் இப்படி ஸ்கூல் தொடங்குவதற்கு முன்பே சுமார் ஐயாயிரம் ரூபாய் சுளையாக லாபம் வந்து விட்டது. முந்தின வருஷத்துக்கு ப்ரெளன் யூனிஃபாரமும் ப்ரெளன் ஷூவும் பல குழந்தைகளிடம் புதிதாக அப்படியே இருந்தும், அதை மூலையில் எறிந்து விட்டுப் புதிய நீல நிற யூனிபாரமும் ப்ளாக் ஷூவும் வாங்க வேண்டியதாயிற்று. பழைய யூனிபாரத்தோடு வரும் குழந்தைகளுக்கு ஃபைன் போட்டுத் துன்புறுத்திப் புதிய யூனிப்பாரம் வாங்க நிர்ப்பந்தம் செய்தாள் மிஸஸ் மாத்யூ. ஆகவே, அவள் வாக்களித்தபடி ஜவுளிக்கடைக்காரருக்கும், ஷூ மார்ட்காரருக்கும் உடனடியாக நல்ல வியாபாரமாயிற்று. -

எலும்பும், தோலுமான க்ஷயரோகக்காரனுக்கு சில்க் சட்டையைப் போட்டு அலங்கரித்து உட்கார வைத்த மாதிரி க்ஷீணித்துப் போய் விட்டிருந்த அந்தக் கிழட்டு மாளிகையின் வெளியே சுத்தமான கச்சிதமான பூந்தோட்டமும், ‘பூக்களை யாரும் மிதிக்கக் கூடாது’ என்று குழந்தைகளுக்கும், பகலில் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க வரும் ஏராளமான பெற்றோர்களுக்கும் எச்சரிக்கையாக ஒரு பளீரென்ற போர்டும் விளங்கிக் கொண்டிருந்தன.