பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : பூக்களை யாரும் மிதிக்கக் கூடாது

1045

ஆனால், இரண்டு நாள் கழித்து அரசாங்கத்தின் பி.டபிள்யூ.டி. இலாகாவைச் சேர்ந்த “சேஃப்டி அண்ட் செக்யூரிடி ஆப் பப்ளிக் பில்டிங்ஸ்” பிரிவில் இருந்து நியூ ஃபீல்டு நர்ஸரி ஸ்கூலுக்கு அவசரமாக ஒரு ரிஜிஸ்தர் நோட்டீஸ் வந்தது.

பொது உபயோகத்துக்கு இலாயக்கில்லாத, இடிந்து விழத்தக்கநிலையிலுள்ள ஒரு பாழுங் கட்டிடத்தில் பள்ளிக்கூடம் நடத்துவதைக் கண்டித்து ஷோ காஸ் நோட்டீஸ் மாதிரி அது விடப்பட்டிருந்தது. இன்ஸ்பெக்‌ஷனுக்காக வரப் போவதாகவும் அதில் குறிப்பிடப் பட்டிருந்தது.

இந்த நோட்டீஸ் கிடைத்ததும் மிஸஸ் மாத்யூவுக்கும், அவள் தம்பிக்கும் அந்தக் கல்கத்தா ஆசாமி மேல்தான் சந்தேகம் வந்தது. “சண்டையையும், எதிர்த்துப் போரிடுவதையும் தினசரி வழக்கமாகக் கொண்டிருக்கும் ஒரு நகரத்திலிருந்து நான் வருகிறேன்” என்று அந்த ஆள் சவால் விட்டதும் நினைவு வந்தது.

பயத்தோடு அவசர அவசரமாக ஒரு மேஸ்திரியையும், கொத்தனாரையும் கூப்பிட்டுக் கட்டிடத்தில் கொஞ்சம் மராமத்து வேலையையும், மேல் பூச்சு, வெள்ளையடித்தல் முதலிய வேலைகளையும் தொடங்கினாள் மிஸஸ் மாத்யூ.

இரண்டு, மூன்று நாளாக அடை மழை வேறு பிடித்துக் கொண்டு கொட்டியது. மைதானத்தில் காலை ப்ரேயரைக் கூட நடத்த முடியவில்லை. ஆகவே, மூன்று வகுப்புக்களின் ப்ரேயரையும் சேர்த்து நடு ஹாலில் அஸெம்பிள் பண்ணச் சொல்லி அங்கே நடத்தினார்கள். நடு ஹால் என்பது ஒயின் ஸெல்லர் நிலவறைக்கு மேலேயும், மாடிக்குக் கீழேயும் இருந்த தரை. அந்த ஃப்ளோரின் நிலைமைதான் மிக மிக மோசமாயிருந்தது. மூன்று தினங்களாக அந்தத் தரை தாங்க முடிந்ததற்கு மேல் எண்ணிக்கையுள்ள கூட்டம் அங்கே கூடி அழுத்தவே, அடைமழை ஈரத்தில் நசிந்திருந்த சுவரும் தளமும் மேலும் பலமிழந்திருந்தன. அதேசமயம் வேலையாட்கள் அந்த மழை ஈரத்தில் மராமத்துக்காகக் கட்டிடத்தை வேறு இடிக்கவும், கொத்தவும் செய்து கொண்டிருந்தனர்.

நான்காவது நாள் ப்ரேயர் நடந்து பாதிக் குழந்தைகள் நிலவறையில் வகுப்புக்கு இறங்கியிருந்தார்கள். பாதிக் குழந்தைகள் ப்ரேயர் ஹாலிலேயே நின்றார்கள். அப்போதுதான் அது யாரும் எதிர்பாராமல் திடீரென்று நடந்தது.

சடசடவென்று பூகம்பம் போல் நிகழ்ந்த அந்த நிகழ்ச்சியில் தளம் சரிந்ததைக் கவனிக்கக் கூட யாருக்கும் நேரமில்லை. மாடியேறிய குழந்தைகள் மட்டுமே பிழைக்க முடிந்தது. கீழே நிலவறையில் அதிகாலையின் மென்மையான பட்டு ரோஜாப் பூக்களாக இறங்கிய நர்ஸரி வகுப்புக் குழந்தைகள் அப்படியே அமுங்கிச் சமாதியாகி விட்டன. சரிந்த தளத்தின் ஹாலில் நின்ற குழந்தைகளில் சுவரோரமாக நின்றவை தப்பின. நடுவில் நின்றவற்றில் கை கால் இழந்து நசுங்கிக் குற்றுயிரும் குலையுயிருமாகப் போனவை பல. டீச்சர்களில் சிலரும் நிலவறையில் நசுங்கி மாண்டிருக்க வேண்டும்.