பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1050

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

 வடிவேலு கடைக் கதவைத் திறந்தார். நயினார் சோடாவும், வறுவலும் வாங்கப் போனான். ஐந்து நிமிஷத்தில் வாங்கிக் கொண்டு திரும்பியும் வந்துவிட்டான்.

“பாட்டில்காரன் தெருமுனையிலே காத்திருப்பான் சார்! முதல்லே அதைக் கணக்குத் தீர்த்துக் குத்துடு சார்” - என்றான் நயினார். அவன் ஃபாரின் பிராந்தி குவாட்டர் பாட்டிலுக்காகக் கேட்ட அதிகத் தொகையை மறு பேச்சுப் பேசாமல் எண்ணிக் கொடுத்தார் வடிவேலு.

“சிப்ஸ்", சோடா, எனக்கு டீக்காசு” - என்று தரகனுக்கே உரிய குணத்தோடு விடாமல் மேற்கொண்டு அரித்த நயினாரிடம் மேலும் ஒரு ஐந்து ரூபாய் நோட்டை நீட்டினார் வடிவேலு. பொறுமையிழந்து கொண்டிருந்தார் அவர். நயினார் புறப்பட்டுப் போனான்.

வடிவேலு கடைக் கதவைத் தாழிட்டுவிட்டுக் குடிக்கத் தொடங்கினார்.

மணி இரவு ஒன்பதரை. முன்பனிக் காலமாகையினால் தெரு வெறிச்சோடி விட்டது. எப்போதாவது ஊடறுத்துச் செல்லும் ஒரு பஸ், லாரி, கார் ஓசையைத் தவிர அந்தச் சாலையில் அதிகச் சத்தமில்லை.

வாசலில் டாக்ஸி வந்து நிற்கும் ஓசையை வடிவேலுவின் செவிகளும் மனமும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தன. உடலின் வெறி ஏறிய சூடு, குடிபோை ஒன்றோடொன்று சேர்ந்து கொண்டால் கேட்கவா வேண்டும்? .

மணி பத்தடிக்க ஐந்து நிமிஷம் இருக்கும்போது வாசலில் டாக்ஸி வந்து நின்றது. நேரே வாயிற்கதவைத் திறந்து பார்க்கத் தயங்கி ஜன்னல் வழியாக முதலில் எட்டிப் பார்த்தார் வடிவேலு. முதலில் நயினார்தான் டாக்ஸியின் முன் nட் - அதாவது டிரைவர் பக்கத்து ஆசனத்தின் கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கினான்.

முகப்பருகே வந்து நயினார் மெதுவாகவும், இரகசியமாகவும் கடைக் கதவைத் தட்டினான். வடிவேலு கதவைத் திறந்தார்.

“வந்தாச்சு. இட்டாரட்டா சார்?”

"சட்னு கூட்டிக்கிட்டு வா. அக்கம் பக்கம் கவனிச்சு யாரும் பார்க்கிறதுக்குள்ளே உள்ளே அனுப்பு.”

“சார் வந்து..?”

“என்ன வந்து.”

“டாக்ஸிக்குப் பணம் பத்தலே. ஒரு ரெண்டு ரூவா இருந்தாக் குடு சார்.”

"தெரியுமே? உன் வழக்கம்.” இரண்டு ரூபாயை நயினாரிடம் நீட்டினார் வடிவேலு. டாக்ஸியிலிருந்து இறங்கி உயரமும் செழிப்புமாய் வளைகுலுங்க வாசனைகள் கட்டியங்கூற ஒரு பெண்ணுருவம் அவசரமும், பதற்றமுமாக ஓடிவந்து நின்று போர்த்திக் கொண்டிருந்த சால்வையை நீக்கியதும் பாதாதி கேச பரியந்தம் விழுங்கி