பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி பாக்கிப் பணம்

1051


விடுவதுபோல் அந்த உருவத்தைப் பார்த்தார் வடிவேலு. திருப்தியாயிருந்தது. ஒடத் தயாராக நிற்கும் பந்தயக் குதிரை போல் திமிறி நிற்கும் வாளிப்பான உடல் வீங்க வேண்டிய இடங்களில் அளவாக வீங்கித் தணிய வேண்டிய இடங்களில் அளவாகத் தணிந்த அங்கங்கள், வடிவேலுவின் நரம்புகள் முறுக்கேறின. அவளது முகமும், இதழ்களும், சிரிப்பும்கூட நல்ல வசீகரம்தான். தோற்றத்தை எடுத்துக்காட்டுவதுபோல் வடிந்த கூரிய நாசி. காமவேட்கைநிரம்பி வழியும் கருவிழிகள். அவள் நின்றாள். அல்ல, அந்த வசீகரத்தேர் நின்றது.

"உனக்காக எவ்வளவு நேரம் காத்திருப்பது?”

“நாகு அரவம் தெலீது.”

(எனக்குத் தமிழ் தெரியாது)

அவள் குரல் சன்னமாக இனிதாகத் தெலுங்குச் சங்கீதம் போலிருந்தது. பாஷை தெரியாமல் அவளோடு சகஜமாகப் பேசமுடியாது என்று தெரிந்தது.ஆனால் என்ன? அவள் உடலோடு விதம் விதமாகப் பேசமுடியுமே. பேசிச்சரசமாடிச் சிரித்துக் குலாவ அவருக்கும் நேரம் இல்லை. வாயால் பேச வேண்டிய அவசியமும் இல்லை.

டாக்ஸியை அனுப்பி விட்டு நயினார் உள்ளே வந்தான்.

"நா போறேன் சார்! எனக்கு வேறே கிராக்கிங்க காத்துக் கிட்டிருக்கும். எனக்குக் குடுக்கிறதைச் சட்டுனு குடுத்தனுப்புங்க. அதுக்கு அதே கேட்டு வாங்கிக்கும், தகராறு பண்ணாது. ரொம்ப நல்ல மாதிரி. ஒன் அவருக்குச் சொல்லி இட்டாந்திருக்கேன். இப்பத்தான் புதிசு சார் சூது வாது எதுவும் தெரியாது. ஊர் கடப்பை.”

வடிவேலு நயினாருக்குப் பணத்தைக் கொடுத்தார். அவன் மேலும் தலையைச் சொறிந்து கொண்டு நின்றான். மேலும் ஏதோ போட்டுக் கொடுத்தார் வடிவேலு. அப்புறமும் விடாமல் அரித்தான் அவன். மேலும் தலையைச் சொறிந்து கொண்டு நின்றான். மேலும் ஏதேதோ சில்லறைக் காசுகளைக் கையில் வந்தபடி வாரி அவன் கையில் திணித்தார் வடிவேலு. அவன் வாங்கிக் கொண்டு ஒருவழியாகப் புறப்பட்டான்.,

“நா வரேன் சார். ஒன் அவுருக்கு மேலே வேண்டாம். கரீக்டா அனுப்பிடுங்க. அதுவே ரிக்ஷா பார்த்துப் போயிக்கும்.”

நயினாரை அனுப்பிவிட்டுக் கதவுகளையும் ஜன்னல்களையும் அடைத்துத் தாழிட்டார் வடிவேலு. கடையிலேயே பின் பகுதியில் வியாபார சம்பந்தமாக வருவோர் போவோர் தங்க ஒர் அறை உண்டு. அதில் டன்லப்பில்லோ மெத்தையோடு கூடிய கட்டில் - வாஷ்பேஸின் எல்லாம் உண்டு.

அவளைத் தழுவினாற் போல அந்த அறைக்குத் தள்ளிக் கொண்டு போனார் வடிவேலு. தகராறு, முரண்டு. மறுப்பு எதுவுமில்லாமல் இழுத்த இழுப்புக்கு விளையாடக் கிடைத்த ஒரு மிருதுவான ரப்பர் பொம்மை போலச் சிரித்தபடி தாராளமாகப் பழகினாள் அவள் உண்மையிலேயே புதுசு என்றுதான் தெரிந்தது.