பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1052

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

நாணமும், கூச்சமும்கூட அப்படி அப்படியே மெருகு குன்றாமல் இருந்தன.வடிவேலுவுக்கு ஒரே கும்மாளம்தான். அவளை அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.

இரவு பதினொரு மணி வடிவேலு உடைகளைப் பழையபடி அணிந்து கொண்டு முகம் கழுவியபின் கடையின் முன்புறம் கேஷ் மேஜை அருகே வந்தார். அதற்கு முன்பே அங்கு வந்து தயாராக நின்றிருந்த அவளிடம், "இந்தா வேனுங்கிறதை எடுத்துக்க." என்று தம் மணி பர்ஸை நீட்டினார் வடிவேலு. அவள் மேல் அவருக்கு மிகவும், பிரியமும் அனுதாபமும் ஏற்பட்டு இருந்தன. மணிபர்ஸிலும் அறுபத்தைந்து ரூபாயோ என்னவோதான் இருந்தது. அவர் கூறியது அவளுக்குப் புரியவில்லை. மேலும் ஜாடை செய்து ஒருவிதமாகப் புரிய வைத்தார்.

ஒருவாறு புரிந்து கொண்ட அவள் மணிபர்ஸை எடுத்து ஐந்து பத்து ரூபாய் நோட்டுக்களை மட்டும் சரியாக எண்ணி எடுத்துக் கொண்டு,"இதிகோபாக்கிடப்புலு தீஸ் கோண்டி” (இதோ பாக்கிப் பணம் எடுத்துக்கொள்ளுங்கள்) என்று அவரிடம் திருப்பிக் கொடுத்தாள்.

“எனக்குப் பாக்கிப் பணம் எதுவும் வேண்டியதில்லை. பூராவும் நீயே எடுத்துக்க” என்று வார்த்தையால் சொல்லவும் சொல்லிச் சைகையும் வேறு செய்தார் அவர்.

அவள் பிடிவாதமாக மறுத்தாள். “தீனிகி பைஸா தீஸ்கோனிலேவு." (இதுக்குமேலே நான் பைசா வாங்கமாட்டேன்) இப்படிச் சொல்லியபடியே அதே கேஷ் மேஜையில் பாக்கிப் பணத்தை மணிபர்ஸோடு மீண்டும் திருப்பி வைத்தாள் அவள்.

வடிவேலுவுக்கு என்னவோ போல் இருந்தது. யாரோ ஒருவருக்குத் தர வேண்டிய பாக்கியை ஏமாற்றி மீதம் பிடித்துத்தான் அவளுக்குக் கொடுக்கிறார் அவர். அவளோ அவருக்கு ஒழுங்காக ஏமாற்றாமல் பாக்கியைத் திருப்பித் தந்து கொண்டிருக்கிறாள்!

தன்னிடம் சிறிதும் பாக்கி இல்லாமல் தீர்ந்து போய்விட்டஏதோ ஒரு நல்ல குணம் அவளிடம் அப்படியே இன்னும் இருப்பது புரிந்தது அவருக்கு.

அதுதான் நாணயம் எந்த மேஜையருகே அவர் தம் நாணயத்தை இழந்தாரோ அந்த மேஜையருகிலேயே ஒரு சிறிதும் அதன் மாற்றுக் குறையாமல் நின்றாள் அவள். உடலை விற்பவளானாலும் மனத்தில் நாணயத்தோடு நின்றாள் அவள். இதில் யார் செய்வது விபசாரம்? என்று தம்மைத் தாமே கேட்டுக் கொண்டார் வடிவேலு.

(குங்குமம், 1979)