பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/431

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

143. சுயமரியாதைக்கும் ஒரு விலை

தானா அப்படி எல்லாம் வளைந்து கொடுத்து அங்கே வந்து அடங்கித் தங்கியிருக்கிறோம் என்று மறுபடி நினைத்தபோது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. தன்னை அந்தப் பெரிய மாளிகைக்குள் சிறை வைத்து விட்டார்களோ என்று பயமாகவும் இருந்தது, எரிச்சலாகவும் இருந்தது.

கூண்டிற்குள் எலியைப் பிடிப்பதற்காக மாட்டி வைக்கும் வடைத் துண்டு போல்தான் தனக்கும், அதில் ஆசை காட்டப்பட்டு விட்டதோ என்று அவனுக்குத் தோன்றியது. வறுமையின் கொடுமை தன்னையும் அதற்குத் துணியச் செய்துவிட்டதோ என்று தன் மேலேயே கோபமாகவும் கழிவிரக்கமாகவும் இருந்தது அவனுக்கு.

சுகமான ஏர்க்கண்டிஷன் அறையின் குளுமை, கட்டிலில் புரளுவதற்கு இதமாக இருந்த டன்லப் பில்லோ மெத்தை எதுவும் அவன் மனத்தை மகிழ்விக்கவில்லை. உடம்பைச் சுகப்படுத்தவில்லை, உணர்வைக் குளிர வைக்கவில்லை.

“காபி, ஓவல் எதினாச்சும் வேணுமா?”

என்று சமையற்காரன் வந்து கேட்ட போது அவனுடைய அந்தக் கேள்வியைப் பொருட்படுத்திப் பதில் சொல்வதே கேவலம் என்பது போல் பேசாமல் இருந்தான் இவன். வறுமையையும் மீறி இவனுடைய அறிவுத் திமிர் இருந்ததுதான் காரணம்.

எழுத்தாளன் சங்கர் வறுமையில் வாடலாம். பெரிய குடும்பத்தை வைத்துக் கொண்டு பணத்துக்குச் சிரமப்படலாம். ஆனால், தன்னையே விலைக்கு விற்கலாமா?

இந்தக் கேள்வி திரும்பத் திரும்ப அவன் மனத்துள் சுழன்றது; கலக்கியது; குடைந்தது.

மடியில் வெண் பஞ்சுப் பொம்மை போன்ற பொமரேனியன் நாய்க்குட்டியை வைத்துக் கொண்டு, ஒயிலாக சோபாவில் சாய்ந்தபடி தன்னிடம் நடிகை ஜெயசரோஜா தெலுங்கின் ஒலிச் சாயலுடன் கூடிய மழலைத் தமிழில் காலையில் செல்லமாகப் போட்ட உத்தரவு அவனுக்கு இப்போது நினைவுக்கு வந்தது. அவனைத் தான் விலைக்கோ, வாடகைக்கோ வாங்கியிருக்கிறோம் என்ற தொனி அவளது அந்த உத்தரவில் இருந்தது.

வெறும் ஐந்து நாள் வாடகைக்கோ, கூலிக்கோ தன்னை விற்றுக் கொள்ளும் அளவுக்கு அவன் வறுமைப்பட்டுத்தான் போயிருந்தான். வறுமை வேறு, சுயமரியாதை வேறு என்பதும் அவனுக்குப் புரிந்துதான் இருந்தது. வறுமைக்காக நேர்மையை