பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/432

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

1054


விற்கலாமா? வறுமைக்காகச் சுயமரியாதையை விற்கலாமா? வறுமைக்காக மான ரோஷத்தை விற்கலாமா? என்பதெல்லாம் வறுமை என்னவென்று தெரியாதவர்கள் மேடைகளிலும் தலையங்கங்களிலும் கேட்கக்கூடிய நாசுக்கான கேள்விகள். வறுமை என்னவென்று அறிந்து உணர்ந்து அனுபவிப்பவனுக்குக் கேள்விகள் கேட்கவும் ஆராயவும் கூடத் திராணி இராது. வறுமையே அவனைக் கொன்றுவிடப் போதுமானதாக இருக்கும்.

இங்கே ஏழ்மையையும் வறுமையையும் பற்றி உருகிப் போய் உரத்த குரலில் பேசுவதற்குக்கூட ஒரளவு வசதி வேண்டும். வசதியில்லாத வெங்கம் பயல் ஏழ்மையையும், வறுமையையும், பசியையும், பட்டினியையும் பற்றிப் பேசினால் கூட அதை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்.வறுமையைப் பற்றிப்பேசப்போதுமான வசதியும், வசதியை விமர்சித்துப் பேசப் போதுமான வறுமையும் வேண்டுமென்று இந்நாட்டு அரசியல் கட்சிகள்தான் ஒரு நிலையான மாமூலை இங்கே ஏற்படுத்தி வைத்திருக்கின்றனவே!

சங்கர் அரசியல் கட்சிகள் எதிலுமே இல்லை. ஆனாலோ அல்லது அதனாலோ வறுமை அவனிடம் நீக்கமற நிறைந்திருந்தது. வறுமை மட்டுமில்லை. வறுமையும் திறமையும் சேர்ந்தே நிறைந்திருந்தன.

'பூங்கொத்து' பத்திரிகை ஆசிரியரை அவன் சந்திக்கப் போயிருந்த போது தான் முதன்முதலாக இந்த நூதன யோசனையை அவர் அவனிடம் தெரிவித்திருந்தார்.

சங்கரன் அந்த வாரத்து வீட்டுச் செலவுக்குப் பணம் வேண்டுமே என்ற வேதனையில் ஒர் அருமையான குறு நாவலுடன் பூங்கொத்து ஆசிரியரைச் சந்திக்கப் போயிருந்தான்.

பூங்கொத்து ஆசிரியர் சினிமா உலகில் உதவி டைரக்டராகப் பல காலம் இருந்து சலித்துப் போய்ப் பத்திரிகைத் துறைக்கு வந்திருந்தவர். பத்திரிகைத் துறைக்கு சினிமாவும் பயன்பட வேண்டுமென்பதைவிடச் சினிமாத்துறைக்குப் பத்திரிகையை அதிகமாகப் பயன்படுத்தினால் பாமரர்கள் ஏமாறுவார்கள் என்று நம்புபவர். எதை விற்றும் எப்படி விற்றும் பணம் பண்ணுவது பாவமில்லை என்று எண்ணிச் செயல்படுபவர்.

"இந்தா பாருங்க சங்கர்! குறுநாவல் தொடர் கதை அது இதுன்னு நீங்களே எழுதிச் சிரமப்படறதை விட இன்னும் சுலபமா ஒரே வாரத்திலே நாலாயிரம் ஐயாயிரம் சம்பாதிக்க வழி பாருங்க.எத்தினி நாள்தான் இப்பிடிக் கஷ்டப்பட்டுக்கிட்டுத் தெருத் தெருவா அலையப் போlங்க?'

“இப்ப நீங்க சொல்றது புரியலே சார்”

"அறிவுள்ளவங்களாயிருக்கிறவங்க பிரபலமாறதை விட ஏதோ காரணத்தாலே ஏற்கனவே பிரபலமாகி இருக்கிறவங்களையே அறிவுள்ளவங்கன்னு ஜனங்களை நாம நம்ப வச்சா ஒரு த்ரில் இருக்கும்.”