பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/433

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி சுயமரியாதைக்கும் ஒரு விலை

1055


“நீங்க என்ன சொல்றீங்கன்னு இன்னும் எனக்குப் புரியலே சார்!”

“புரியும்படியாச் சொல்றேன் கேளுங்க. கோடிக் கணக்கான சினிமா விசிறிகளை எங்க பத்திரிகைப் பக்கம் கவனத்தைத் திருப்பறதுக்காக ஒரு புதிய திட்டம் போட்டிருக்கோம். பிரபல நடிகைகளைத் தொடர்கதை எழுத வைக்கறதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்.”

“அதெப்படி சார் முடியும்? இங்கே முக்கால்வாசி ஸ்டார்ஸுங்களுக்குத் தமிழே தெரியாதே?. தெலுங்கோ, கன்னடமோ, மலையாளமோ தானே அவங்க தாய்மொழி.”

“தமிழ்லே எழுதறதுக்குத் தமிழ் தெரிஞ்சாகணும்னு உமக்கு எந்தக் கபோதி சொன்னான்?”

‘இதெல்லாம் தெரியறத்துக்குக் கூட ஒருத்தர் வந்து சொல்லிக் கொடுக்கணுமா என்ன?”

"வீண்வாதம் வேணாம். இப்ப ஃபீல்டிலே இருக்கறதிலேயே டாப் ஹீரோயினான 'குமாரி ஜெயசரோஜா நம்ப மேகஸின்லே ஒரு தொடர்கதை எழுதறதா ஒப்புத்துக்கிட்டிருக்காங்க.”

“ஜெயசரோஜா'வை டாப் ஹீரோயின்னிங்களா? 'டாப் லெஸ் ஹீரோயின்னிங்களா? என் காதிலே சரியா விழலே.”

இதைக் கேட்டு பூங்கொத்து ஆசிரியர் சிரித்துக் கொண்டார்.

“சரி! சரி! இந்தக் குத்தல் கிண்டல் எல்லாம் வேணாம். அப்பர் கூனூர்லே அவுங்களுக்கு அருமையான பங்களா இருக்கு அவுங்க கூடப் போயி நாலு நாளு அங்கே தங்கி அவுங்க பேரிலே அந்த நாவலை எழுதிக் குடுத்தா நாலாயிரமோ ஐயாயிரமோ கிடைக்கும். நாய் வித்த காசு ஒண்னும் குரைக்கப் போறதில்லை.”

“அதாவது பச்சையாகச் சொல்லணும்னா உடம்பை வித்த காசை அறிவை வித்து வாங்கனுமாக்கும்.”

“இந்த விதண்டாவாதம்லாம் வேண்டாம். உமக்குப் பெரிய குடும்பம் மனைவி நிரந்தர நோயாளி. ஏழெட்டுக் குழந்தைகள், ஐந்து பெண், ரெண்டு பையன்கள். செலவும் சிரமங்களும் நிறைய இருக்கும். உம்ம கஷ்டத்துக்குப் பணம் நிறையத் தேவை. அது எப்படி வந்தால் என்ன?”

“ஒரு சத்தியவாதிக்குப் புகழும் பணமும் வர வேண்டும்தான். ஆனால், அவை வருகின்றன என்பதைவிட எப்படி எங்கிருந்து வருகின்றன என்பதுதான் மிக மிக முக்கியம்”

“நீர் உருப்படப் போறதில்லே. வாதப் பிரதிவாதங்களிலேயே சாகப் போகிறீர்.”
“வாதப் பிரதிவாதங்கள்தான் அறிவு வளர்ச்சிக்கு உரம்.”