பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1058 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

“பின்னால் எல்லாம் விவரமாகச் சொல்கிறேன். இப்போது நான் சொல்வது புரிந்தாலும் புரியாவிட்டாலும் கேட்டுக் கொள்:”

“சொல்லு.”

“இந்த ஐநூத்தி இருபத்தஞ்சு ரூபாயைப் பத்தி உன் டைரியிலே எழுதறப்போ.. 'நண்பன் சங்கரின் சுயமரியாதை அவசர அவசரமாக விலைபோக இருந்தபோது தக்க சமயத்தில் அதைத் தடுக்கக் கொடுத்து உதவிய கடன்' என்று மட்டும் சுருக்கமாக எழுதிக் கொள். பின்னால் முடிகிறபோது நான் உனக்கு இதைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன். உனக்கு ஆட்சேபணை இல்லேன்னா இன்னொரு நானூறு ரூபாய்க்கு என் பெயருக்கு ஒரு செக் கடனாகக் கொடு. அதையும் முடிகிறபோது திருப்பித் தந்துவிடுகிறேன். என்னைப் போல் ஒரு அறிவாளி கடனாளியாயிருக்கலாம். ஆனால், ஏமாளியாகவோ கோமாளியாகவோ ஆகிவிடக்கூடாது. அப்படி ஆகாமல் தக்க சமயத்தில் நீதான் என்னைத் தடுத்தாய். உனக்கு நன்றி.”

தனக்காகத் தன் நண்பன் சங்கரால் மனம் திறந்து கூறப்பட்ட நன்றியின் காரணம் அவ்வளவு தெளிவாகவும் உடனடியாகவும் விளங்கவில்லை என்றாலும், மேலும் நானூறு ரூபாய்க்குச் செக் தர அவன் உடனே இணங்கினான்.

தெருக்களில் தியேட்டர்கள் வெளித்தள்ளிய ஜனக்கூட்டம், அதன் குரல்கள்; சலசலப்புகள் எல்லாம் குறைந்து மெளனமும் சலனமற்ற சந்தடியற்ற- நடமாட்டமற்ற நள்ளிரவின் சுகமான அமைதியும் மீண்டும் திரும்பி வந்திருந்தன.

(தினமணிக் கதிர், தீபாவளி மலர், 26.10.1979)