பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144. துறவு

ம்பேத்கார் நகரில் போய் வைத்திய உதவிகளைச் செய்த பின் வழக்கமாக முதியோர்களுக்காக அங்கே நடத்தும் கீதை, குறள் வகுப்புகளையும் முடித்துக் கொண்டு சுவாமி பரிசுத்தானந்தர் ஆசிரமத்துக்குத் திரும்பும் போது இரவு ஒன்பது மணி ஆகியிருந்தது. நல்ல நிலா, பகல் போலிருந்தது.

அப்போது ஆசிரமத்துக்கு எதிர் வரிசையில் இருந்த அந்த லாட்ஜிலிருந்து ஒரே கூச்சலும், சத்தமுமாக ரகளையாயிருந்தது, அவர் கவனத்தைக் கவர்ந்தது.

வழக்கமாக அமைதியாயிருக்கும் அங்கே என்றாவது ஒரு நாள் இப்படிக் கலவரமும், ரகளையும் நடப்பது உண்டுதான். ஆனால், வெளியிலிருந்து பிறர் தலையிடும் படியான ரகளையாக அது இராது.கேட்டைத் திறந்து சைக்கிளை உள்ளே கொண்டு போய் நிறுத்தி விட்டு மீண்டும் தெருவுக்கு வந்து நின்று கொண்டு காது கொடுத்துக் கேட்டார் சுவாமி. ஆளரவமற்ற நடுத் தெருவில் இரு புறத்து மரங்களின் பசுமைக்கிடையே அந்த நிலவொளியில் காவி உடைகளோடு எரியும் ஜ்வாலையாக நின்றார் அவர் “ஐயோ கொல்றாங்களே! கேட்பாரில்லையா? ஈவு இரக்கம் இல்லாத கொலைகாரப் பாவிங்களா!” என்று ஈனமான ஒரு பெண் குரல் காற்றில் வந்தது.

கேட்ட குரலின் பரிதாப நிலையில் மனம் உருகிக் கால்கள் அந்தத் திசையை நோக்கி விரையத் துடித்தன. ஆனால், அறிவு தயங்க வைத்தது.

பரிசுத்தானந்தர் அந்த லாட்ஜைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த செய்திகளே அவருடைய தயக்கத்துக்குக் காரணமாயிருந்தன.

ஊரின் ஒதுக்குப்புறமான அந்தப் பகுதியில் தோன்றிய முதல் கட்டிடமே அவருடைய ஆசிரமந்தான். ஆசிரமம் தோன்றிய சில ஆண்டுகளுக்குப் பின்னே ‘லாட்ஜ்’ கட்டிடம் தோன்றியது. ‘போர்டிங்’ வசதிகள் எதுவும் இல்லாமல் இருந்தும், ஊரிலிருந்து விலகி ஒதுக்குப் புறமாயிருந்தும், அந்த லாட்ஜில் கூட்டம் பொங்கி வழிந்தது. லாட்ஜ் நடத்துகிறவரும் நிறைய லாபம் சம்பாதித்தார். நாளாக நாளாக அங்கே என்ன நடக்கிறது என்பது புரிந்தது. சட்டத்தின் காவலர்களும் அதற்குத் துணை என்றும், அவர்களுக்கு அதற்காக மாமூல் உண்டு என்றும் சொன்னார்கள்.

சுவாமி பரிசுத்தானந்தரின் நண்பர்கள் எவ்வளவோ முயன்றும் அந்த லாட்ஜ் வழியில் அங்கே இயங்குவதைத் தடுக்க முடியவில்லை.

ஒரு ரிக்‌ஷா காலியாக அந்த லாட்ஜ் பக்கமிருந்து வந்தது.

சுவாமி அந்த ரிக்‌ஷாக்காரனைக் கைதட்டிக் கூப்பிட்டார். ரிக்‌ஷா அவரருகே வந்து யாரோ யாருடைய குரல் வளையையோ நெரிக்கிற மாதிரி கிறீச்சிட்டு நின்றது.