பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/438

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1060

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

“என்னப்பா, அங்கே கூப்பாடு…?”

“ஒண்ணும் இல்லீங்க, சாமி. லாட்ஜ்காரன் கிராதகனுங்க. ஒரு சின்னப் பொண்ணுக்கு அம்மை போட்டிருக்குதுங்க. ஈவு இரக்கம் இல்லாமே அதெப் போயி தொந்தரவு பண்றானுவ. ‘கஸ்டமர்’தான் முக்கியம்னு அடிச்சுக் கொல்றானுவ. கேள்வி கேப்பார் இல்லே.”

சொல்லி விட்டு அவன் போய் விட்டான். இப்போது சுவாமியின் கால்களும் தயங்கவில்லை; அறிவும் தயங்கவில்லை. அம்பு பாய்வது போல் நேர் எதிர்ப் பக்கம் லாட்ஜுக்குள் போய் நுழைந்தார். வாசலில் உயரமும் பருமனுமாக இருந்த நாலைந்து அடியாட்கள் கூட அவரைத் தடுக்க முடியவில்லை. கூப்பாடு வந்த திசையை அடையாளம் வைத்து நடந்ததில் ஓர் அறைக்குக் கொண்டு போய் விட்டது. கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு, முரட்டு ஆள் ஒருவன். கொடி போல் அழுக்குப் பாயில் துவண்டு கிடந்த இளம் பெண் ஒருத்தியைக் கையில் இருந்த பிரம்பால் விளாசிக் கொண்டிருந்தான். அவள் முகத்தில் அம்மை முத்துக்கள் தெரிந்தன.

தேஜஸ் நிறைந்த கம்பீரமான தோற்றமும், காவி உடையுமாக ஒருவர் உள்ளே நுழைந்ததைக் கண்டதும் அவன் திகைத்துத் திரும்பினான்.

அவர் அவனிடம் எதுவும் பேசவில்லை. எரித்து விடுவது போல் பார்த்தார். அடுத்த கணமே யாருடைய அனுமதியையும் எதிர்பாராமல் ஒரு குழந்தையை வாரி எடுப்பது போல் பாயில் கிடந்த அந்தப் பெண்ணை எடுத்துக் கொண்டு வெளியேறினார் சுவாமி. யார் என்ன செய்கிறார் என்று சுதாரித்துக் கொண்டு அவர்கள் தடுப்பதற்குள் விடுவிடுவென்று சுவாமி தெருவுக்கு வந்து தமது ஆசிரமத்துக்குள்ளே நுழைந்து விட்டார்.

ஆசிரமத்துத் தோட்டத்திலிருந்து ஒரு தலைவாழை இலையை அறுத்து எண்ணெயைத் தடவி அதில் அந்தப்பெண்ணைக் கிடத்தினார். நல்ல செவ்விள நீராகப் பறிக்கச் செய்து வெட்டிப் பருகச் செய்தார். அம்மை தணிவதற்குரிய சிகிச்சைகளைச் செய்தார். ஆசிரமப் பணியாளர்களிடம் ஒப்படைத்துக் கவனிக்கச் செய்தார்.

அம்மை போட்டுச் சுயநினைவில்லாமல் சாகக் கிடக்கும் ஒரு பெண்ணையே நிர்ப்பந்தப்படுத்தும் அளவுக்குப் பணத்தாசை மனிதனை மிருகமாக்கியிருப்பதை வெறுத்தார். மனிதனை மிருகமாக்கும் இச்சைகளை வளர்த்து அதையும் வியாபாரமாக்கி நடத்துபவர்களை எண்ணிக் குமுறியது அவர் உள்ளம். அவருடைய ஆசிரம நிர்வாகி முன் ஜாக்கிரதையாக இருக்கட்டும் என்பதற்காக எந்த நிலையில், எங்கிருந்து, எதற்காக ஒரு பெண்ணைச் சுவாமி பரிசுத்தானந்தர் மீட்க நேர்ந்தது என்பதை விளக்கி போலீஸுக்கு ஃபோன் செய்தார்.

ஆனால், எதிர்த்தரப்பில் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து கேட்ட ஹெட் கான்ஸ்டபிள், “ஒரு பெண்ணை உங்க சாமியார் மீட்டுக் கொண்டாந்து சிகிச்சை செய்யறாருங்கறதை நியூஸ் பேப்பர் ஆபீஸுக்கு வேணும்னாச் சொல்லுங்க. அது எங்க