பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : துறவு

1061

சம்பந்தப்பட்ட விஷயம் இல்லே. ரிட்டன் கம்ப்ளெயிண்ட் இருந்தாக் குடுங்க” என்றாரோ ஒழியச் சுவராசியம் காட்டவில்லை. லாட்ஜுக்காரர் மேல் அவருக்கு என்ன கருணையோ?

ஆசிரம நிர்வாகியும் இதற்கு மேல் இதைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை; சுவாமி பரிசுத்தானந்தரின் செல்வாக்கு அவரைக் காக்கும் என்று நம்பினார்.

இரவு பதினொன்றரை மணிக்கு ஆசிரம வாசலில் போலீஸ் ஜீப் வந்து நின்ற போதுதான் அப்படியில்லை என்பது நிரூபணமாயிற்று. ஜீப்பிலிருந்து சப் இன்ஸ்பெக்டரும், இரண்டு கான்ஸ்டபிள்களும் கீழே இறங்கினர். ஆசிரம நிர்வாகியைத் தூக்கத்திலிருந்து எழுப்பினர்.

எதிர்ப்பக்கத்து லாட்ஜிலிருந்து ஒரு பெண்ணை அந்த லாட்ஜுக்குள் டிரஸ்பாஸ்’ செய்து கடத்தி வந்ததாகச் சுவாமி பரிசுத்தானந்தர் மீது வாரண்ட்டுடன் கைது செய்ய வந்திருந்தார்கள். நிர்வாகி எல்லா விவரங்களையும் ஆதியோடந்தமாகக் கூறி விளக்கியும் பயன் இல்லை.

லாட்ஜ் உரிமையாளர்களிடமிருந்தும், பெண்ணின் சகோதரனிடமிருந்தும் முறையான புகார்கள் எழுத்து மூலம் வந்திருப்பதாகவும், அதன் அடிப்படையில் செயல்பட வேண்டியிருப்பதாகவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறினார்.

ஆசிரம நிர்வாகி சுவாமியை எழுப்பினார். சுவாமி இன்ஸ்பெக்டரிடம் எல்லாவற்றையும் விளக்கி விட்டு, அந்த இளம் பெண் அம்மைக் கொப்புளங்களோடு வாழை இலையில் கிடத்தப்பட்டிருந்த அறைக்கே அழைத்துப் போய்க் காட்டினார். இன்ஸ்பெக்டர் திருப்தி அடையவில்லை.

“மன்னிக்க வேண்டும். உங்கள் செல்வாக்கை நான் அறிவேன். ஆனாலும் சட்டம் செல்வாக்கு முன்னால் கூடத் தயங்க முடியாது.”

“தயங்க வேண்டும் என்று நானும் கோரவில்லை. ஆனால், தவறு செய்தவர்களை அல்லவா உங்கள் சட்டம் தயங்காமல் தண்டிக்க வேண்டும்? அப்பாவிப் பெண் ஒருத்தியைக் காப்பாற்றப் போனதைத் தவிர நான் வேறு எந்தத் தவறும் செய்யவில்லையே.”

“அது ருசுப்பிக்கப் படுகிறவரை நீங்கள் எங்கள் பொறுப்பில் இருந்துதானாக வேண்டும்.”

சுவாமி புன்முறுவல் பூத்தார்.நிர்மலமாக ஒரு குழந்தை சிரிப்பதைப் போலிருந்தது. “அம்மையோடு துடித்துக் கொண்டிருக்கும் இந்தக் குழந்தையைத் தொந்தரவு செய்ய வேண்டாம். நான் எங்கு வேண்டுமானாலும் வருகிறேன்” என்றார் சுவாமி.

“இவளைக் கவனித்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டுப் போலீஸாரோடு புறப்பட்டார்.