பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1062

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

மறுநாள் காலைத் தினசரிகளில் எல்லாம் “லாட்ஜிலிருந்து இளம்பெண்ணை கடத்தியதாகச் சுவாமி பரிசுத்தானந்தர் கைது.” என்று தலைப்புச் செய்தி வந்து விட்டது. யாராலும் அதை நம்ப முடியவில்லை. ஊரே குமுறியது. சுவாமியின் தொண்டுகளால் பயனடைந்த ஏழை எளியவர்கள் போலீஸ் ஸ்டேஷன் முன்னால் கூடி விட்டார்கள்

மிக மிகச் சிலர் மட்டும் புரளி பேசினார்கள். “இந்தக் காலத்திலே குடும்பஸ்தரை விடச் சாமியாருங்க தான் அதிகமாத்தப்பு பண்றாங்க.”

சட்டம் தீமையைத் தடுக்கவும் , நல்லதைப் பாதுகாக்கவுமே இருந்தாலும், பல வேளைகளில் அது தீமைக்குச் சேவை செய்கிறது. நன்மையைக் கொடுமைப். படுத்துகிறது. சுவாமி பரிசுத்தானந்தர் விஷயத்தில் கூட அப்படித்தான் ஆகி விட்டது.

ஆனால், பொதுமக்கள் எல்லாருக்கும் அந்த லாட்ஜுக்காரனைப் பற்றி நன்றாகத் தெரியும். பெண்களையும், சாராயத்தையும் பக்கத்து மாநிலங்களிலிருந்து கள்ளத். தனமாகக் கடத்தி வந்து விற்கும் முரடனுடைய புகாரை நம்பிச் சுவாமி பரிசுத்தானந்தரைக் கைது செய்தது அநியாயம் என்றே பலரும் கருதினார்கள். அம்பேத்கார் நகரிலிருந்தும், சுவாமி வைத்தியப் பணி, கல்விப் பணி புரிந்த குப்பங்கள்,சேரிகளிலிருந்தும் போலீஸ் ஸ்டேஷன் முன்பு பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி விட்டனர்.

சுவாமியை விடுவிக்கா விட்டால் ஸ்டேஷனையே தகர்த்து விடுவார்கள் போலிருந்தது. தகவல் போலீஸ் மந்திரி வரை போய் மந்திரியோடு ஐ.ஜியே நேரில் வந்து இன்ஸ்பெக்டரைப் பற்றி விசாரித்தறிந்து, லாட்ஜுக்காரனுக்கு உடந்தையா யிருந்து, சுவாமி பேரில் தவறான குற்றம் சுமத்தியதற்காக அவரைச் சஸ்பெண்டு செய்து விட்டுச் சுவாமியை விடுதலை செய்தார்.

விடுதலையான சுவாமி பரிசுத்தானந்தர் முதலில் மிக மிக ஆவலோடு அந்தப் பெண்ணின் உடல் நிலை பற்றித்தான் விசாரித்தார். மந்திரி அவரிடம் மன்னிப்புக் கேட்டார்.

“எங்களைப் பெரிய மனசு பண்ணி மன்னிச்சிடனும் சாமீ. தப்பு நடந்து போச்சு பிரதிபலனை எதிர்பாராமே பொதுக்காரியங்களைப் பண்ணிக்கிட்டிருக்கிற உங்களைப் பத்தி பேப்பருங்கள்ளே தாறுமாறா நியூஸ் வர்ராப்பல ஆயிடுச்சு

“பரவாயில்லை! கருங்கல் கோடை மழையில் கரைந்து விடாது. ஒரு சத்தியவாதியை வெறும் பழி மட்டுமே சீரழித்து விட முடியாது.”

“உங்க புகழுக்கு எங்களால் இப்படி ஒரு களங்கம் நேர்ந்ததுக்கு இலாகாவின் சார்பில் நானே மன்னிப்புக் கேட்டுக்கறேன் சுவாமி. பேப்பருங்களிலேயும் இலாகாவின் தவறுகளால்தான் இப்படி நேர்ந்திடிச்சுன்னு நானே ஓர் அறிக்கையும் விட்டுடறேன்” என்றார் ஐ.ஜி. .

சுவாமி மறுபடியும் குழந்தையைப் போலச் சிரித்தார். முகத்தில் எந்தவிதச் சலனமும் இன்றி ஐஜிக்குப் பதில் சொன்னார்.