பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : துறவு

1063

“இதில் கவலை எங்கிருந்து வந்தது? உண்மையில் இன்றுதான் என் சந்நியாசத்தில் இன்னும் பெரிய பரீட்சையில் ஜயிக்க முடிந்திருக்கிறது. எல்லா ஆசைகளையும் துறக்க முடிந்த எனக்குப் புகழ், செல்வாக்கு, பிராபல்யம், இவற்றின் மேலிருந்த ஆசைகளை இது வரை விட முடியாமல் இருந்தது. பழியின் மேல் வெறுப்பும், புகழின்மேல் நாட்டமும் இருக்கிற வரை துறவு கூடப் பூர்ணமாக முடியாது. முழுப் பக்குவம் என்பது புகழ், பழி, எதையும் லட்சியம் பண்ணாமல் சிரித்தபடிசேவையில் ஒன்றிவிடுவதுதான் என்பதாக என் குரு அடிக்கடிகூறுவார். அந்தப் பக்குவ நிலைமையை நான் இன்றுதான் அடைந்தேன். புகழையும் துறக்கத் துணிகிற மனப்பக்குவத்தை நான் அடைய ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்ததற்காக நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.”

மந்திரியும், ஐ.ஜி.யும் இதைக் கேட்டு அப்படியே பிரமித்துப் போய் நின்றார்கள். ‘கோடை மழையில் கருங்கல் கரைந்து விடாது’ என்ற வாக்கியந்தான் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு நினைவு வந்தது. சுவாமியோ அம்மை போட்டிருந்த பெண்ணுக்கு இளநீர் பறித்துக் கொடுப்பதற்காகக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு விரைந்தார்.

(கலைமகள், தீபாவளி மலர், 1979)