பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : பின்னக் கணக்கில் தகராறு

1065

பள்ளிக்கூடத்தில் வாங்கித் தின்பதற்கு அல்லது வேறு எதற்காவது முழு ரூபாயோ முழு அணாவோ எதைக் கொண்டு வந்தாலும், அதை அவன் மாற்றவே மாட்டான். அதை அப்படியே வைத்துக் கொண்டு என்னிடமாவதோ, வேறு யாரிடமாவதோ கடன் கேட்பான். முழுசை மாற்ற அவனுக்குத் தெரியாது. பிடிக்காது. காரணம் பின்னக் கணக்கில் அவனுக்கு எப்போதுமே குழப்பம்.

ஹாலில் அசாதாரண நிசப்தம் நிலவியது.ராஷ்டிரபதி வந்து விட்டார். தேசிய கீதம் முழங்கியது. எல்லோரும் எழுந்து நின்றார்கள்.

மீண்டும் என் ஆவல் அதிகமாகியது. இன்று பரிசு வாங்கும் ராம் மனோகர் ராவ் என்னோடு கூடப் பள்ளி மாணவனாக இருந்த அதே ராம் மனோகரன் தானா வேறு யாராவதா?

எலி வால் பின்னலும், நடு நெற்றியில் ஒரு கறுப்புச் சாந்துப் பொட்டும் கூடவே பொன்னிறத்தில் ஒரு சந்தனப்பொட்டுமாக மந்த நடை நடந்து மூன்று கெஜ தூரத்தை நான்கு நிமிஷங்களில் கடக்கும் சிறுவன் ராம் மனோகரனின் ஞாபகம் என் மனக்கண்ணில் படியத் தொடங்கியது. அந்தப் பள்ளிப் பையனின் தோற்றத்தையும் இன்றைய இந்த எழுபது வயதுத் தோற்றத்தையும் ஒப்பிட்டு அடையாளம் கூடக் காண முடியாமல் இருந்தது. பிய்த்தெடுத்துப் பக்கத்துக்கு ஒன்றாகப் பொருத்தின மாதிரி இந்த மீசை பழைய முக அடையாளத்துடன் புரிய விடாமல் குழப்புவதற்கே பெரிதும் உதவியது.

‘ஒரு ரூபாயிலிருந்து கால் ரூபாயை மாற்றி விட்டால் மீதம் என்ன?’ என்று அந்த நாளில் ராம் மனோகரனைக் கேட்டால் மீதத்தைச் சொல்வதற்குப் பதில், ‘ஒரு முழு ரூபாயை ஏன் மாற்ற வேண்டும்? அது அப்படியே ஒரு முழு ரூபாயாகவே இருந்து தொலைத்து விட்டுப் போகட்டுமே’ என்றுதான் பதில் சொல்வான். முழுமையைப் பின்னப்படுத்துவது அவனுக்கு எப்போதுமே பிடிக்காது.

கும்பகோணம் கல்லூரியில் படிக்கிற காலத்தில், காவேரியைக் கடந்து அக்கரைக்குப் போக என்று காலேஜில் சேர்ந்த முதல் நாள் ஒரு முழு வெள்ளி ரூபாய் கொண்டு வந்தான் அவன். எனக்குத் தெரிந்த வரை அந்த முழு வெள்ளி ரூபாயை காலேஜ் படிப்பு முடிந்து வெளியேறி டிஸி, வாங்கிக் கொண்டு போகிற வரை ராம் மனோகரன் மாற்றவே இல்லை. நானோ, வேறு சிநேகிதர்களோதான் ‘போட்’டுக்கு அவனுக்காகச் சில்லறை கொடுத்துக் கொண்டிருந்தோம்.

“ஒரு முழு வெள்ளி ரூபாயை மாத்தறதுக்கு மனம் வரலேடா. நீயோ சுப்புணியோ, ராமசேஷனோ இன்னிக்குக் கொடுத்துடுங்கோ!” ஒவ்வொரு நாளும் இதே வாக்கியத்தைத்தான் கிளிப் பிள்ளை போலச் சொல்லுவான் ராம் மனோகரன். கும்பகோணம் காலேஜில் இண்டர் மீடியட்டோடு நிறுத்தித் திருச்சி போய் விட்டான் அவன். காரணம் அவன் தந்தை சரஸ்வதி மஹாலை விட்டு விட்டுத் திருச்சியில் ஒரு கல்லூரியில் சமஸ்கிருத விரிவுரையாளராகப் போனதுதான்.