பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/444

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1066

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

அவன் திருச்சியில் இருந்த போது, ஒரு சமயம் நான் ஸ்ரீவைகுண்ட ஏகாதசிக்காகப் போயிருந்தேன். அவன் செயிண்ட் ஜோஸப்பில் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தான். நான் போயிருந்த சமயம் லீவு நாளாகையினால், என்னோடு கூடச் சுற்றினான். நான் அங்கே அவனுடைய விருந்தாளி என்று பேர். ஆனால், டவுன் பஸ் ஏறும் போது, ஹோட்டலின் டி.பனுக்குப் பில் கொடுக்கும் போது எல்லாச் சமயங்களிலும்,”டேய், எங்கிட்டமுழு அஞ்சு ரூபா நோட்டா இருக்குடா. சில்லறையா இல்லே. நீயே கொடுத்திடு”என்று வழக்கம் போல் ராம் மனோகர் செலவையெல்லாம் என் தலையில் கட்டி விட்டான். அவனுடைய முழு நோட்டை மாற்றவேயில்லை.

முழுசை மாற்றக் கூடாது என்னும் அவனுடைய வாழ்க்கைத் தத்துவம் திருச்சிக்குப் போன பின்னும் கூட மாறியதாகத் தெரியவில்லை. பலமுறை “என்னிடம் முழுப் பத்து ரூபாய் நோட்டாகத்தாண்டா இருக்கு. பத்தை மாத்தறதை விட அஞ்சை மாத்துவதே தேவலை, நீயே உன்னோடதை மாத்து” என்று அவனிடம் சொல்ல நினைத்துச் சொல்ல நினைத்துச் சொல்ல முடியாமலே போய் விட்டது எனக்கு.

அவனையும், அவன் குடும்பத்தையும் பார்த்து சாஸ்திர ஞானமும் கஞ்சத் தனமும் உடன் பிறந்தவையோ என்று கூட எனக்குச் சந்தேகமாகப் போய் விட்டது. ராஜா சரபோஜி காலத்தில் மகாராஷ்டிரப் பிரதேசத்தைக் கலாசாரத் தலைநகரமாகிய புனாவிலிருந்து தஞ்சைக்குக் குடியேற்றிய புகழ் பெற்ற சித்பவன் மரபினரான முன்னோர்களின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று ராம் மனோகர் தன் குடும்பத்தைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொள்வதுண்டு.

ராம் மனோகரின் முன்னோர்கள் தஞ்சையில் குடியேறியதுமே முழுசைக் குறைப்பதில்லை - முழுசைக் குறைத்தால் புரியாது என்று பின்னக் கணக்கை ஆசாரக் குறைவாகவே கருதி விட்டார்களோ என்று கூட மேலும் எனக்குச் சந்தேகமாக இருந்தது.

அவார்டு விழா தொடங்கப்பட்டு, ராஷ்டிரபதி சமஸ்கிருதத்தின் முக்கியத்துவம் பற்றியும், அதன் பழமை பற்றியும், அதன் கலாசாரப் பின்னணி பற்றியும், உயர்வைப் பற்றியும் - தேசத்தில் சமஸ்கிருத ஞானம் புறக்கணிக்கப்படுவதால் ஏற்படும் அறிவுபூர்வமான நஷ்டம் பற்றியும் தமது உரையைப் படித்துக் கொண்டிருந்தார்.

விருதுகளுக்கான ஸைட்டேஷனையும், அவார்டுகள் அடங்கிய பேழையையும் அதிகாரி ஒருவர் படிப்பதற்கும், கொடுப்பதற்கும் ஏற்ற முறையில் வரிசைப்படுத்தி அடுக்கிக்கொண்டிருந்தார். ஹாலில் இருந்தவர்கள் ராஷ்டிரபதியின் உரை வாசிப்பை அமைதியாகச் செவி மடுத்துக் கொண்டிருந்தார்கள். என் நினைவு மறுபடியும் பின்னோக்கி ஓடியது.

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி சந்தர்ப்பத்துக்குப் பின் பல வருடங்கள் நான் என் சிநேகிதன் ராம் மனோகரனைப் பார்க்க முடியவில்லை.