பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/445

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : பின்னக் கணக்கில் தகராறு

1067

பல ஆண்டுகளுக்குப் பின் எனக்குக் கல்யாணமாகி, நான் டெல்லியில் பெரிய உத்தியோகத்துக்கு மாற்றலாகிக் குடும்பஸ்தனான பின், ஏதோ பிரார்த்தனைக்காகத் திருப்பதி போயிருந்தேன்.

அங்கே தற்செயலாக ராம் மனோகர் ராவை அவருடைய மனைவி சகிதம் சந்தித்தேன். மந்த்ராயலத்துக்குப் போய் விட்டுத் திரும்புகிற வழியில் திருப்பதி தரிசனத்துக்கு வந்ததாகவும், சாயங்காலம் ரேணிகுண்டாவிலிருந்து, ஒன்றாகவே சேர்ந்து சென்னைக்குப் போகலாம் என்றும் ராவ் கூறினார். திருச்சியிலேயே தன் தகப்பனார் வேலை பார்த்து ஓய்வு பெற்ற அதே கல்லூரியில், தான் சமஸ்கிருதம் கற்பிப்பதாக ராவே கூறக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

நான் திருப்பதி தரிசனம் முடிந்ததும் சென்னைக்குத் திரும்பி, அங்கிருந்து குடும்பத்தோடு டில்லி போக இருந்தேன். ராவும் மனைவியோடு சென்னை திரும்பி அங்கு சில உறவினர்களைப் பார்த்து விட்டு, அப்புறம் திருச்சி செல்லப் போவதாகத் தெரிவித்தார்.

மாலையில் சென்னை ரயிலுக்காக இருவரும் அவரவர் குடும்பத்தோடு ரேணிகுண்டா ஸ்டேஷனுக்கு வந்தபோது, “என்னிடம் முழு நூறு ரூபாய் நோட்டா இருக்கு! அதைப் போயி மாத்த வேண்டாம்னு பார்க்கறேன். நீயே எனக்கும் என் ஒய்ஃபுக்கும் சேர்த்து டிக்கட் எடுத்திடு” என்றார்.

எக்காரணம் கொண்டும் முழுசை மாத்தக் கூடாது என்னும் கொள்கை புரொபஸராகி சம்பாதிக்கும் இன்றும் ராம் மனோகர் ராவை விட்டுப் போகவில்லை என்று தெரிந்தது. -

அது ஒரு ரூபாயோ, ஐந்து ரூபாயோ, நூறு ரூபாயோ, எதுவானாலும் அதை மாற்றிப் பின்னமாக்கிச் செலவழித்து விடக் கூடாது என்பதில் ராவ் அப்படியேதான் இருந்தார். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மைதாஸும் ஷைலக்கும் மறைந்திருக்கிறார்கள். சிலரிடம் அந்தக் குணச்சித்திரங்கள் எப்போதுமே வெளிப்படுகின்றன. சிலரிடம் சில சமயங்களில் மட்டுமே வெளிப்படுகின்றன என்று தோன்றுகிறது.

இதன் பின், மீண்டும் பல வருஷங்கள் எங்களுக்குள் சந்திப்பே நிகழவில்லை.

அதிகாரி ஒருவர் விருதுக்கானவரைப் பற்றிய ஸைட்டேஷனைப் படிக்க - அது முடிந்ததும் ஏ.டி.ஸி. எடுத்து நீட்டிய பேழையையும், ரூபாய் பத்தாயிரத்துக்கான செக் அடங்கிய கவரையும் ராஷ்டிரபதி உரியவருக்கு வழங்கினார். எல்லாருமே குடுகுடு கிழங்கள். பார்வை மங்கிய சோடாபுட்டி கண்ணாடிகள். ஒரு பக்கம் நூலால் கட்டிய பிரேம் போன கண்ணாடிகள், சிலர் பதற்றத்தால் ராஷ்டிரபதி நின்ற மேடையில் ஏறியதுமே தள்ளாடினர். சிலர் தடுக்கி விழுந்தனர். சிலர் விருது வாங்கியதும், ராஷ்டிரபதியை வணங்குகிற மறதியில் கையில் இருந்த பேழையையோ, கவரையோ நடுக்கத்தில் கீழே நழுவ விட்டனர்.