பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/446

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1068

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

இதெல்லாம் சகஜம்தான். சில ‘காட்டரேட்’ ஆப்பரேஷன்களுக்குப் பின் எனக்கே கண் பார்வை மங்கிச் சற்றுத் தள்ளி இருப்பவர்களை அடையாளம் புரியாத போது மற்றவர்களுக்கு இப்படி நேர்வதைப் பற்றி அதிசயம் ஒன்றும் இல்லை. விருதுகளுக்குச் சிபாரிசு செய்யும் கமிட்டியில் சம்ஸ்கிருதம் தெரிந்தவர்கள் என்ற முறையில் எனக்கு, தெரிந்தவர்கள் சிலர் இருந்தனர். அவர்கள் அழைப்பு அனுப்பியே நான் இன்று இங்கு வர நேர்ந்திருக்கிறது. அவர்களைக் கேட்டால் கூட இது அந்த ராம் மனோகர் ராவ்தானா என்பது புரிந்து விடும்.

விழா முடியட்டுமே அப்புறம் கேட்கலாம் அல்லது ஸைட்டேஷனலிருந்தாவது புரிகிறதா என்று பார்க்கலாமே! ஸைட்டேஷன் மிகவும் சுருக்கமாக இருந்தது. ‘முப்பது வருஷமாக சம்ஸ்கிருதம் கற்பிக்கிறார். இவ்வளவு நூல்கள் எழுதியிருக்கிறார்’ என்பது போல் இருந்த அக்குறிப்புக்களை வைத்து அது என் பால்ய நண்பன்தானா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ள முடியவில்லை.

முப்பது வருஷமாகப் புத்தகம் எழுதுவதும், வேலை பார்ப்பதும் எல்லோருக்கும் பொருந்தக் கூடிய பொது விவரங்கள்தான். அவற்றில் என் பள்ளித் தோழனை அடையாளம் காட்ட எதுவுமே இல்லை. நான் விழா முடிகிற வரை பொறுமையாகக் காத்திருக்க வேண்டியதாயிற்று.

விழா முடிந்து மறுபடி தேசிய கீதம் ஒலித்து நிறைந்தது. ராஷ்டிரபதி பரிவாரம் புடை சூழ உள்ளே போனார். வந்திருந்தவர்களுக்கு ஊழியர்கள் டீயும், பிஸ்கட்டுகளும் வழங்க ஆரம்பித்தார்கள்.

நான் விருது வாங்கியவர்களிடையே இவர்தான் ராம் மனோகர் ராவோ என என் மனத்தில் சம்சயப்பட்ட நபரைக் குறி வைத்து நடந்தேன். அருகில் நெருங்கியும் விட்டேன்.அவர் பக்கத்திலிருந்த மற்றொரு விருது வாங்கிய சமஸ்கிருத பண்டிதரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். இல்லை, விசாரித்துக் கொண்டிருந்தார் - ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார்.

“சாஸ்திரிகளே! நான் கரோல் பாக் போயாகணும். எங்கிட்ட நூறு ரூபாய் நோட்டாக இருக்கு அதை மாத்த வேண்டாம்னு பார்க்கறேன். சில்லறையா ஒரு ரெண்டு ரூபா இருந்தாக் கொடுங்கோ. மெட்ராஸ் போறப்போ ரயில்லே திரும்பத் தந்துடறேன்.”

நான் விசாரிக்க வேண்டிய அவசியமே நேரவில்லை. அது சத்தியமாக என் பால்ய சிநேகிதன் ராம் மனோகர் ராவ்தான். நிச்சயமாக வேறு யாரும் இல்லை. வேறு யாராகவும் இருக்க முடியாது. எழுபத்தேழு வயதான பின்பும், இன்றும் பின்னக் கணக்கில் அவருக்குத் தகராறு இருந்தது. முழுசை மாற்றினால் குழப்பம் என்ற அவருடைய நிரந்தர வாழ்க்கைத் தத்துவமும் அப்படியேதான் இருந்தது.

நல்ல வேளை யார் செய்த புண்ணியமோ! தேசிய கீதம் முடிந்ததும் ராஷ்டிரபதியையே ஒரு நிமிஷம் நிறுத்தி வைத்துக் கொண்டு, “சார்! எங்கிட்ட நூறு ரூபாயா இருக்கு. நீங்களும் செக்'காவே குடுத்துட்டேள், மாத்த முடியாது. தயவு