பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : ஒரு வெறுப்பின் மறுபுறம்

1071

இருக்கும் என்ற எண்ணத்தில்தான் அவர் தாக்கி எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்” என்று தங்களுக்குள் பேசிக் கொள்வது கூட உண்டு. அவர்கள் தம்மைப் பற்றி அப்படிப் பேசிக் கொள்வது அவருக்குத் தெரிந்துதான் இருந்தது. ஆனால், பெரும்பாலான இளம் பத்திரிகையாளர்கள் அவரை மதித்தனர். அவருக்கு அஞ்சினர்.

சில துணிச்சலான இளம் விமர்சகர்களும், கலைஞர்களும் அவருக்குக் ‘கிழட்டுப் புலி’ என்று கூட ஒரு பட்டப் பெயர் சூட்டியிருந்தார்கள். சமயாசமயங்களில் தமக்குத் தாமே நினைத்துப் பார்க்கும் போது கூட அந்தக் காரணம் பொய் அல்ல என்று அவருக்கே தோன்றியது. ஆனால், உள்ளூறச் சில சந்தேகங்களும் அவருக்கே உண்டுதான். தாமாகவே மற்றவர்களிடம் பேசும் போது சவடாலாக ஏதாவது சொல்லி வந்தார். தம்முடைய பெருமையையும் ,மரியாதையையும் உயர்த்திக் கொள்வதற்காகப் பிறருடைய பெருமையைக் குறைத்துச் சொல்லவும் அவர் தயங்கியதில்லை. அது ஒரு பழக்கமாகவே கூட ஆகியிருந்தது.

“இப்போ, புதுசா யாரோ ஒரு அழகான குட்டி, அவ பேரென்ன? சுகுண குமாரியோ, சகுண குமாரியோ.யாரோ ஒருத்தி, அவ என்னைப் ‘பர்ச்சேஸ்’ பண்ணிடனும்னு ப்ளாங் செக் கொடுத்து ரகசியமா ஆளனுப்பினா. ஒய்! நானா மசிவேன்?” என்பார்.

“என்னைத் தனியா மகாபலிபுரம் கோல்டன் ஸாண்ட்ஸ் பீச் ஹோட்டலில் போய் வீக் எண்டுக்குத் தங்கலாம்னு அவளே ஒரு தினுசாச் சிரிச்சுக்கிட்டே கூப்பிட்டாங்காணும். அதுக்கு வேறே ஆள் பாருடீன்னுட்டேன்” என்று இன்னொரு சமயம் கூறுவார்.

ஐம்பத்தேழு வயது நிறைந்த, தலை பூரண சந்திரன் மாதிரி பளீரென்று வழுக்கையாகிப் போன ‘ஆர்ட் கிரிட்டிக்’ ஜம்புநாதனா இப்படிப் பேசுகிறார் என்று பலருக்கு நம்ப முடியாமல் கூட இருக்கும்.

எந்தச் சமயத்தில் எப்படி மனநிலை இருக்கிறதோ, அப்படி மற்றவர்கள் அவர் வாயில் அரைபடுவார்கள். சிலர் அவருடைய வாய்க்குப் பயந்தே, அவரிடம் மரியாதையாக நடப்பது போல் நடித்தார்கள். பலர் நிஜமாகவே மதித்ததும் உண்டு.

ஆனால், உண்மையில் இளைஞர்கள் அவரைப் பற்றிக் கோபமாக இருந்தார்கள். சுகுணகுமாரியை அவர் கறுப்பா, சிவப்பா என்று கூட நேரில் பார்த்ததில்லை. படங்களில் பார்த்த போது மிகமிக அழகாயிருந்தாள். அபரிமிதமான அழகுள்ளவர்கள் மேலெல்லாம் அவருக்கு இனம் புரியாததொரு புகைச்சல் உண்டு. காரணம் அவர் குரூபி. தெற்றுப் பல், முகம் நிறைய அம்மை வடு. ஒரு கண் கொஞ்சம் பூ விழுந்தாற் போல் மாறு கண்ணாகத் தெரியும்.

தம் அழகினால் பிறரைக் கவர்ந்து மயக்க முடியாத காரணத்தால் அவருக்குள் அடங்கிப் போன தாகங்கள், தாபங்கள் எல்லாம் பேச்சுக்களாகவும் வம்புகளாகவும்