பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88. கார்த்திகைச் சொக்கப்பனை

வெளியில் உலவி விட்டுத் தெருவில் நுழைந்தேன். கார்த்திகை மாதம் வீடுகளில் திண்ணைகளிலும், வாயிற்படிகளிலும், மாடப்பிறைகளிலும் பொல்லென்று பூத்த நட்சத்திரப் பூக்களைப் போல அகல் விளக்குகள் மினுமினுத்துக் கொண்டிருந்தன. ‘’ ‘ஆகா! இந்தச் சின்னஞ் சிறிய அகல் விளக்குகளின் ஒளிக் கலவையில் என் இதயத்தைக் கவரும்படியாக அப்படி என்னதான் அடங்கியிருக்கிறது? எத்தனையோ பல நிறங்களில், எத்தனையோ பல விதங்களில், எரிகின்ற இந்த மின்சார விளக்குகளில் அந்தக் கவர்ச்சி எனக்குத் தென்படவில்லையே!’

தீபம் ஒளியின் உயிருள்ள சக்தி; மின்சாரம் ஒளியின் உடலைச் சிதைத்து வடித்துப் பெருக விட்ட இரத்தம்.அதனால்தான் தீபங்களின் ஒளியிலுள்ள கவர்ச்சி மின்சாரத்தில் ஏற்படுவதில்லை. இப்படி ஏதேதோ சிந்தனைகள் மனத்தில் கிளர்ந்தன.

“என்ன ஐயா? பராக்குப் பார்த்துக் கொண்டே எதிரே வருகிறவனைக் கவனிக்காமல் போகிறீரே?”

இப்படிக் கேட்டது யார் என்று நிமிர்ந்து பார்த்தேன். புன்முறுவல் பூத்த முகத்துடன் திருவாளர் திருவடியாப் பிள்ளையவர்கள் எதிரே வந்து கொண்டிருந்தார். “அடடே! வாருங்கள் ஏதோ சிந்தனையோடு நடந்து கொண்டிருந்தேன். நீங்கள் எதிரே வருவதைக் கவனிக்கவில்லை.”

“நீங்கள் கவனிக்கா விட்டால் என்ன? நான்தான் கவனித்து விட்டேனே? அது சரி; கோவில் பக்கமாகப் போய் விட்டு வரலாம்! வருகிறீர்களா?” “போகலாம். கோவிலில் இன்றைக்கு என்ன?”

“இன்றைக்குக் கார்த்திகை இல்லையா? சொக்கப்பனை கொளுத்தப் போகிறார்கள். போய்ப் பார்த்து விட்டு வருவோமே” என்றார் அவர்.

“சரி வாருங்கள், போவோம்” என்று அவரோடு திரும்பி நடந்தேன்.

அது மலையடிவாரத்து ஊராகையினால் தெரு, வில்லின் முதுகுப்புறம் போல நடுவில் மேடாகவும், இரு முனைகளிலும் பள்ளமாகவும் கிழக்கு மேற்காக அமைந்திருந்தது. தெருவின் மேற்குக் கோடியில் சேது நாராயணப் பெருமாள்கோவில். பள்ளத்திலிருந்து தலையை நீட்டி நிமிர்ந்து நின்ற அந்தக் கோவிலின் கோபுரம் தெருவின் மறுகோடியிலிருந்து பார்க்கும் போது அடிவானத்தில் முளைத்தெழுந்த அதிசயம் போல் தோன்றியது. கார்த்திகைக்காக ஏற்றப்பட்டிருந்த தீபங்கள் அந்த அதிசயத்தில் ஒளிப் பூக்களாக மினுக்கிக் கொண்டிருந்தன.