பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/450

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1072

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

வாயிலிருந்து புறப்பட்டன. யாரை அவர் அதிகமாகத் தாக்குகிறாரோ, அவர்களைப் பற்றியே நினைத்து நினைத்து அவர் உருகுகிறார் என்பது பிறருக்குத் தெரியா விட்டாலும், அவருக்கே தெரியும். அவர் அந்தரங்கத்துக்கு அது மிக மிக நன்றாகத் தெரியும்.

கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்விக்கும் கனவுக் கன்னியான சுகுணகுமாரியை அவர் தாக்கி விமர்சித்தாலும், உள்ளூற அவர் மனம் அவளுக்காக ஏங்கியது. அவளையே நினைத்து, அவள் என்னைச் சரிக்கட்டுவதற்காக மகாபலிபுரத்தில் தனியே அந்தரங்கமாகத் தங்க அழைத்துப் போவதாகக் கூறினாள் என்று கற்பித்து, மகிழ்ந்து அதைப் பிறரிடமும் வாயரட்டை அடித்தார் அவர்.

இனிய அவரது அடிமன ஓட்டம் இப்படித்தான் இருந்தது. ஆனால், பிறர் என்னவோ அவரைப் பற்றி அப்படி நினைக்கவே இல்லை, காரணம் அவரது வயதுதான்; அவரது முதிர்ச்சிதான்.

அவரது முழுப் பெயர் வி.வி.ஜம்புநாதன். பத்திரிகை உலகில் வி.வி.ஜே. என்று இனிஷியல் எழுத்துக்களைச் சொன்னாலே போதும். அவ்வளவு தூரம் அவர் பிரபலமாகியிருந்தார். எல்லாருக்கும் அவரைத் தெரிந்திருந்தது.

“வி.வி.ஜே.யை நேரே பார்த்தால், சுகுணகுமாரி அப்படியே கதறி அழுது விடப் போகிறாள்” என்று சகப் பத்திரிகையின் விமர்சகர்கள் அவரிடம் கிண்டலாகக் கூறுவதும் உண்டு.

அதனால் அவருக்கு உள் மனதில் ஒரு பிரமை. என்றாவது எங்காவது சுகுணகுமாரியைச் சந்திக்க நேருவது போலவும், அவள் தன் முன் கதறியழுது, “நான் உங்களுக்கு ஒரு கெடுதலும் பண்ணலீங்களே! ஏன் இப்படி என்னைக் கரிச்சுக் கொட்ட றீங்க?” என்று மன்றாடுவது போலவும் கற்பனை செய்தே மகிழத் தொடங்கி விட்டார்.

ஆனால், அந்தக் கற்பனை நீண்டகாலம் நீடிக்கவில்லை. சில மாதங்கள் கழித்துச் சினிமா உலகுடன் தொடர்பு உள்ள விவிஜேக்குப்பிடித்தமான ஒரு சங்கீத வித்துவான் காலமானார். விவிஜேயும், வேறு சில பத்திரிகையாளர்களும் அந்த வித்துவானின் வீடு சென்று அவருடைய மனைவியிடம் துக்கம் விசாரித்துக் கொண்டிருந்த போது, அந்த இழவு வீட்டிலும் முண்டியடித்துக் கொண்டு நெருக்கும் ஒரு கூட்டம் புடை சூழ சுகுணகுமாரியும் அங்கே துக்கம் கேட்க வந்து சேர்ந்தாள்.

அன்று அப்போது வி.வி.ஜே.யை அவள் கண்டு கொள்ளவே இல்லை. அவள் சரியாகப் பார்க்கவில்லையோ என்ற தயக்கத்தில் உடன் இருந்த ஓர் இளம் பத்திரிகையாளன், “சுகுணா அம்மா சாரைத் தெரியுமில்லே ஸார்தான் பிரபல…”

“ஸார் யாரு? தெரியாதுங்களே!”

“ஸார் பிரபல விமர்சகர். வி.வி.ஜே.இவர்தான்!”

“- - - -“